செய்திகள்

சீன அதிபருடன் படகு சவாரி - இரண்டாவது நாளாக உயர்மட்ட பேச்சுவார்த்தையை தொடரும் மோடி

Published On 2018-04-28 12:03 IST   |   Update On 2018-04-28 12:03:00 IST
இரண்டாவது நாளாக சீனாவில் தங்கி இருக்கும் பிரதமர் மோடி படகு இல்லத்தில் சவாரி செய்தவாறு இந்தியா- சீனா இடையிலான பல்வேறு தரப்பு நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசித்தார்.#Modi#Xi Jinping#summit
பீஜிங்:

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்ற பின்னர் நான்காவது முறையாக தற்போது சீனா சென்றுள்ளார்.
தோக்லாம் எல்லை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நேற்று வுஹான் நகரில் சீன பிரதமர் ஜி ஜின்பிங்-வுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற மாநாடுகள் நடத்தப்பட வேண்டியது அவசியம் என இந்த ஆலோசனையின்போது பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

அடுத்த 2019-ம் ஆண்டு இதுபோன்ற உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று அவர் குறிப்பிட்டபோது சீன அதிபரும் மகிழ்ச்சியுடன் இந்த கருத்தை ஆமோதித்தார்.

இன்று இரண்டாவது நாளாக சீனாவில் தங்கி இருக்கும் பிரதமர் மோடி படகு இல்லத்தில் சவாரி செய்தவாறு இந்தியா- சீனா இடையிலான பல்வேறு தரப்பு நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறார்.

முன்னதாக, வுஹானில் உள்ள ரம்மியமான ஈஸ்ட் லேக் (கிழக்கு ஏரி) பகுதியில் இன்று காலை ஜி ஜின்பிங் உடன் நடைபயிற்சி செய்த மோடி, அவருடன் தேனீர் அருந்தி மகிழ்ந்தார்.



பின்னர், மிக பிரமாண்டமான அந்த ஏரியில் மிதக்கும் படகு வீட்டில் சவாரி செய்தவாறு இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக பாகிஸ்தான் ஆதரவுடன் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வரும் சீனா, இனி இந்தியாவுடன் இணைந்து இந்த பணிகளை தொடர இந்த பேச்சுவார்த்தையின்போது தீர்மானிக்கப்பட்டது.

உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய தீமையான பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க இணைந்து நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், திரைப்படம் உள்பட இந்தியாவின் பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை துறையில் சீனா கால்பதிக்க வேண்டும் என்ற விருப்பத்தை மோடி தெரிவித்தார். இதை வரவேற்ற சீன அதிபர் ஜின்பிங், தாம் ஏராளமான இந்திய படங்களை பார்த்திருப்பதாகவும், இது நல்ல யோசனை என்றும் குறிப்பிட்டார்.

இந்தியா-சீனா இடையிலான எல்லையில் அமைதியை நிலைநாட்டும் வகையில் இருநாடுகளை சேர்ந்த ராணுவ உயரதிகாரிகளுக்கு இடையில் தகவல் தொடர்புகளை பலப்படுத்தவும், இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்கவும் இன்றைய சந்திப்பின்போது தீர்மானிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.#Modi#Xi Jinping#summit 

Similar News