செய்திகள்

பேஸ்புக் பயனாளர்களின் ரகசியங்கள் அம்பலம் - பிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் மன்னிப்பு

Published On 2018-03-25 20:10 IST   |   Update On 2018-03-25 20:10:00 IST
பல கோடி மக்கள் தொடர்பான ரகசியங்களை அம்பலப்படுத்திய விவகாரத்தில் பிரிட்டன், அமெரிக்க நாளிதழ்களில் முழுபக்க விளம்பரங்களின் மூலம் பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. #apologising
லண்டன்:

சமூக வலைத்தளங்களின் ஜாம்பவனாக விளங்கும் பேஸ்புக் நிறுவனத்தினால் சமீபத்தில் ஏற்பட்ட குழப்பம் மோடி ஆப் வரை சென்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கியதாக பகிரங்கமான குற்றச்சாட்டு வெடித்தது.

இந்த குற்றச்சாட்டை உண்மை என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டார். மேலும், இதுபோன்ற தவறு நடந்தமைக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் கடந்த வாரம் தனது முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்தார். 

இந்நிலையில், பேஸ்புக் பயன்படுத்தும் பல கோடி மக்கள் தொடர்பான ரகசியங்களை அம்பலப்படுத்திய விவகாரத்தில் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழ்களில் முழுபக்க விளம்பரங்களின் மூலம் மார்க் ஜூக்கர்பர்க் இன்று மன்னிப்பு கோரியுள்ளார். 

‘உங்களுடைய தகவல்களை பாதுக்காக்கும் பொறுப்பு எங்களுக்கு உண்டு. அப்படி இல்லாவிட்டால் உங்களது நன்மதிப்பை நாங்கள் பெற முடியாது. நடந்தது ஒரு நம்பிக்கை துரோகம். அதை (தனிநபர்களின் தகவல்கள் கசிந்த சம்பவம்) தடுக்க நாங்கள் அப்போது அதிகமாக ஏதும் செய்யவில்லை என்பதற்காக நான் வருந்துகிறேன். 

ஆனால், மீண்டும் இதுபோல் நேராதிருக்கும் வகையில் பயனாளர்களின் தகவல்களை தீவிரமாக பாதுகாக்க தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என அந்த விளம்பரத்தில் மார்க் ஜுக்கர்பர்க் குறிப்பிட்டுள்ளார். #tamilnews #apologising 

Similar News