செய்திகள்
தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் புதிய அரசியல் கட்சி அலுவலகம் - லாகூர் நகரில் திறப்பு
தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் புதிய அரசியல் கட்சியான மில்லி முஸ்லீம் லீக் கட்சியின் அலுவலகம் லாகூர் நகரில் திறக்கப்பட்டது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்து மும்பையில் கடந்த 26-11-2008 அன்று குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 166 பேர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்தியவர், ஹபீஸ் சயீத்.
லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்தின் நிறுவனரான இவர், அந்த இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜமாத் உத் தவா என்ற பெயரில் இயக்கத்தை நடத்தி வருகிறார். மேலும், மில்லி முஸ்லீம் லீக் என்ற புதிய கட்சியையும் தொடங்கினார். இந்த கட்சிக்கு அந்நாட்டு தேர்தல் கமிஷன் இன்னும் அங்கீகாரம் அளிக்கவில்லை.
இந்நிலையில், ஹபீஸ் சயீத்தும், அவரது கூட்டாளிகள் 4 பேரும் பாகிஸ்தான் அரசால் கடந்த ஜனவரி மாத இறுதியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அவரும், அவரது இயக்கத்தினர் 37 பேரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஹபீஸ் சயீத் மீதான பாகிஸ்தான் அரசின் பிடி மேலும் இறுகி உள்ளது. அவர் தீவிரவாதிதான் என பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், அவரது பெயர் தற்போது தீவிரவாத தடுப்பு சட்ட பட்டியலின் 4-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச தீவிரவாதியாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ள ஹபீஸ் சயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னை சர்வதேச தீவிரவாதியாக பிரகடணப்படுத்திய அறிவிப்பை திரும்பபெற வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் ஹபீஸ் சயீத் சார்பில் சமீபத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
பல மாதங்களாக வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்த ஹபீஸ் சயீத் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மில்லி முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் என ஹபீஸ் சயீத் அறிவித்துள்ளார்.
இந்த கட்சியை அந்நாட்டு தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய ஹபீஸ் சயீத் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அதை தேர்தல் கமிஷன் கடந்த அக்டோபர் மாதம் நிராகரித்து விட்டது. தேர்தல் கமிஷனின் முடிவை எதிர்த்து இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஹபீஸ் சயீத் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் ஹபீஸ் சயீத்தின் புதிய அரசியல் கட்சியை பதிவு செய்ய பாகிஸ்தான் அரசின் உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் ஹபீஸ் சயீத்தின் கட்சிக்கு அங்கீகாரம் அளித்தால் அரசியலில் வன்முறையும், தீவிரவாதமும் தலை தூக்கும் என்பதால் தேர்தல் கமிஷன் அக்கட்சிக்கு அங்கீகாரம் அளிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லாகூர் நகரில் 120-வது பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மில்லி முஸ்லிம் லீக் கட்சியின் அலுவலகத்தை நேற்று ஹபீஸ் சயீத் திறந்து வைத்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் இந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஹபீஸ் சயித்தின் மில்லி முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட காரி யாகூப் ஷேக் என்பவர் 5,822 (4.59 சதவீதம்) வாக்குகளை பெற்று நான்காவது இடத்துக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று கட்சி அலுவலகத்தை திறந்துவைக்க வந்திருந்த ஹபீஸ் சயீதை அவரது ஆதரவாளர்கள் மலர்களை தூவி சிறப்பான முறையில் வரவேற்றனர். அங்குள்ள டாட்டா சாஹெப் தர்கா அருகாமையில் உள்ள பகுதி மக்களின் குறைகளை அவர் கேட்டறிந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.