செய்திகள்

டாக்கா உணவு விடுதி தாக்குதல் - 4 தீவிரவாதிகள் கைது

Published On 2017-02-02 05:34 IST   |   Update On 2017-02-02 05:34:00 IST
22 பேர் கொன்று குவிக்கப்பட்ட டாக்கா உணவு விடுதி தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
டாக்கா:

வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் குல்ஷன் என்ற இடத்தில் உள்ள உணவு விடுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந் தேதி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடித்தும் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் வெளிநாட்டினர் 17 பேர் உள்பட 22 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்தியப்பெண் தாரிஷி ஜெயினும் பலியானவர்களில் ஒருவர் ஆவார்.

இந்த தாக்குதலை தடை செய்யப்பட்ட ஜே.எம்.பி. என்று அழைக்கப்படுகிற ஜமாத்துல் முஜாகிதீன் பங்களாதேஷ் அமைப்பினர் நடத்தியதாக தெரியவந்தது.

இந்த தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளை நேற்று முன்தினம் இரவு, டாக்காவில் ஜாத்ரபாரி பகுதியில் போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக அதிரடிப்படை போலீஸ் செய்திதொடர்பாளர் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், “டாக்கா உணவு விடுதி தாக்குதலை ஐ.எஸ். இயக்கத்தை ஆதரிக்கிற ஜமாத்துல் முஜாகிதீன் அமைப்பினர் நடத்தி உள்ளனர். இந்த இயக்கத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், தகவல் தொழில் நுட்ப வல்லுனர்” என கூறினார்.

கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், 21 தோட்டாக்கள், 4 கூர்மையான ஆயுதங்கள், குண்டு செய்வதற்கான கச்சாப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான ஜகாங்கிர் ஆலம், 2 வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது. 

Similar News