செய்திகள்

இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் திடீர் போர் பயிற்சி நவாஸ் ஷெரீப் முன்னிலையில் நடந்தது

Published On 2016-11-17 04:19 GMT   |   Update On 2016-11-17 04:19 GMT
இந்திய எல்லை அருகே, பாகிஸ்தான் திடீர் போர் பயிற்சியில் ஈடுபட்டது. இந்த போர் பயிற்சி, பிரதமர் நவாஸ் ஷெரீப் முன்னிலையில் நடந்தது.
இஸ்லாமாபாத்:

இந்தியா மீது பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும், அத்துமீறிய தாக்குதல்களையும் நடத்தி மறைமுகப்போரை திணித்து வருகிறது.

அந்த வகையில், காஷ்மீர் எல்லைப்பகுதியில் முகாமிட்டு, இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்த சதிசெய்து கொண்டிருந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி நள்ளிரவில் துல்லியமான தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டதுடன், சுமார் 40 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

பாகிஸ்தான், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி தந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம், பகவல்பூர் நகர் இந்திய எல்லை அருகே உள்ள காயிர்பூர் டேம்வாலி என்ற இடத்தில் பாகிஸ்தான் படைகள் நேற்று ‘திடீர்’ போர் பயிற்சியில் ஈடுபட்டன.

இந்த போர் பயிற்சி, பிரதமர் நவாஸ் ஷெரீப், ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இந்த போர் பயிற்சியில் விமானப்படையும், ராணுவமும் பங்கேற்றிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. எல்லை பகுதியில் பாகிஸ்தான் துருப்புகள் 7 பேர் கடந்த வாரம் இந்திய படையினரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

போர் பயிற்சி முடிந்தவுடன், அங்கு கூடி இருந்தவர்கள் மத்தியில் நவாஸ் ஷெரீப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நமது நாட்டின் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள நாம் தயார் நிலையில் இருப்பதை பிரதிபலிக்கிற வகையில்தான் இந்தப் பயிற்சி நடந்து முடிந்துள்ளது. எந்தவொரு நாடும் தேச பாதுகாப்பை எண்ணி கவலைப்பட்டுக்கொண்டிருக்க முடியாது.

பாகிஸ்தான் எந்த நிலையிலும் வலியப்போய் தாக்குதல் நடத்தாது. அதுதான் நாம் பின்பற்றி வருகிற கொள்கை. நமது பிராந்தியத்தில் அமைதி தவழ்வதற்கு பிற நாடுகளிடமும் பாகிஸ்தான் இதைத்தான் எதிர்பார்க்கிறது.

பிராந்தியத்தில் நடந்து கொண்டிருக்கிற நிகழ்வுகளை நாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை கெடுக்கிறபோது, அதற்கு சரியான பதிலடி தரப்படும்.

பாகிஸ்தானின் எதிரிகள் தங்கள் நோக்கத்தை தெரியப்படுத்தி உள்ளனர். அவர்கள் நமது நாட்டின் முன்னேற்றத்தின் அறிகுறிகளை சகித்துக்கொள்ள மாட்டார்கள். எனவேதான் பாகிஸ்தான், பயங்கரவாதத்துக்கு பலியாகி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News