செய்திகள்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ராணுவ தளபதியுடன் ஆலோசனை

Published On 2016-09-21 22:20 IST   |   Update On 2016-09-22 08:26:00 IST
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று ஐ.நா. சபையில் உரையாற்றுவதற்கு முன்பாக ராணுவ தளபதியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
வடக்கு காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எல்லையில் இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு எல்லைப்பகுதி தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இதனால், இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்ற பதட்டத்தில் பாகிஸ்தான் உள்ளது.

ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று காஷ்மீர் பிரச்சினையை எழுப்புகிறார். ஐ.நா. சபையில் பேசுவதற்கு முன்னதாக அந்நாட்டு ராணுவ தளபதி ரஹீல் செரீப்பிடம் பேசி உள்ளார். ஐ.நா. சபையில் பேச உள்ள விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் ரஹீல் செரீப்பிடம், நவாஸ் செரீப் பேசியதாக தெரிகிறது. அப்போது காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக தற்போது நிலவும் பதட்டமான சூழ்நிலை குறித்தும் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

மேலும், இந்தியாவின் நடவடிக்கைக்கு முழு பலத்துடன் பதிலடி கொடுக்குமாறு நவாஸ் செரீப் கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உரி தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டம் ஏற்பட்டு உள்ள நிலையில், பாகிஸ்தான் வடக்கு நகரங்களுக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளது. பாகிஸ்தான் விமானப்படை தயாராக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. சில பகுதிகளில் வாகனங்கள் செல்லும் பாதைகளையும் அடைத்து உள்ளது.

அவசர சூழ்நிலை ஏற்பட்டால் விமானப்படை விமானங்களை தரையிறக்கவும், புறப்படவும் ஏதுவாக நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

Similar News