செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றிபெற வேண்டும்: லண்டன் மேயர் விருப்பம்

Published On 2016-09-16 07:02 GMT   |   Update On 2016-09-16 07:02 GMT
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றிபெற வேண்டும் என லண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயராக பதவி வகிக்கும் சாதிக் கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.
லண்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், நான் அமெரிக்க அதிபரானால் முஸ்லிம்களை நாட்டில் இருந்து விரட்டியடிப்பேன் என பேசி வருகிறார். இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனக்குரல் எழும்பிவரும் நிலையில் லண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயராக பதவி வகிக்கும் சாதிக் கான் என்பவரும் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து ஏற்கனவே குரல் கொடுத்திருந்தார்.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லிம் மக்களிடையே மிகவும் செல்வாக்குமிக்க பிரபலமான நபராக அறியப்படும் லண்டன் மேயர் சாதிக் கான், தற்போது அமெரிக்காவில் முதன்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

சிக்காகோ நகரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் நேற்று பங்கேற்றுப் பேசிய சாதிக் கான், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரின் தீவிர விசிறி என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார்.

நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலார் கிளிண்டன் நிச்சயமாக வெற்றி பெறுவார்
என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அமெரிக்க அதிபர் பதவியில் அமரும் முழுத்தகுதியும் ஹிலாரிக்கு உண்டு என குறிப்பிட்டார்.
 
இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை என்ற முறையில் உலகின் சக்திமிக்க அமெரிக்க அதிபர் பதவியில் ஹிலாரி கிளிண்டன் என்ற பெண்மணி அமர வேண்டும் என நான் விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Similar News