செய்திகள்

ஐபோன் வேகத்தை குறைத்த விவகாரம்: டிம் குக் மீது வழக்கு பதிவு

Published On 2018-01-21 12:22 IST   |   Update On 2018-01-21 12:22:00 IST
தென் கொரிய நுகர்வோர் அமைப்பு ஆப்பிள் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது.
சியோல்:

ஐபோன்களின் வேகத்தை வேண்டுமென்றே குறைத்ததால் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் மீது தென் கொரிய நுகர்வோர் அமைப்பினர் வழக்கு தொடர்ந்திருக்கிறது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இதர நாடுகளில் ஆப்பிள் நிறுவனம் மீது இதே விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

ஆப்பிள் நிறுவன ஐபோன்களின் ஆயுளை திட்டமிட்டு குறைப்பதாக அந்நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பேட்டரி பிழை ஏற்படும் போது ஐபோனின் வேகத்தை வேண்டுமென்றே குறைத்து, வாடிக்கையாளர்களை புதிய போன்களை வாங்க தூண்டுவதாக ஆப்பிள் நிறுவனம் மீது பல்வேறு வழக்குகள் தொடர்பப்பட்டிருக்கின்றன.

தென் கொரிய சட்ட வல்லுநர் குழு சார்பில் அளிக்கப்பட்டிருக்கும் புகாரில் ஆப்பிள் நிறுவனம் மீது சொத்துக்களை சேதப்படுத்துவது மற்றும் ஊழல் புகார் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்காக, ஐபோன் வேகத்தை குறைத்ததற்கான பொறுப்பை ஆப்பிள் ஏற்க வேண்டும் என சட்ட வல்லுநர் குழு அதிகாரி பார்க் சூன் ஜங் தெரிவித்திருக்கிறார்.

ஆப்பிள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு சியோல் மத்திய மாவட்ட அரசு சட்ட அலுவலகம் சார்பில் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. ஆப்பிள் கொரிய அலுவலகமும் இவ்விவகாரம் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. 



கடந்த ஆண்டு இறுதியில் ஐபோன்களின் வேகம் திட்டமிட்டு ஆப்பிள் நிறுவனம் குறைப்பதாக தகவல் வெளியானது. இதற்கு ஆப்பிள் சார்பில் வெளியிட்ட பதிலில், ஐபோன்களில் வழங்கப்பட்டிருக்கும் உதிரி பாகங்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபோன் பேட்டரி தீர்ந்து போகும் போது ஐபோன் வேகம் தானாக குறைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது, அந்நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

சமீபத்தில் அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு டிம் குக் வழங்கிய பேட்டியில், 'ஐபோன்களின் வேகத்தை குறைக்கும் அம்சத்தை வாடிக்கையாளர்கள் விரும்பாத பட்சத்தில், அதனை ஸ்விட்ச் ஆஃப் செய்யும் வசதி புதிய அப்டேட் மூலம் வழங்கப்பட இருக்கிறது.' என தெரிவித்தார். 

ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் வெளியிட இருக்கும் புதிய ஐ.ஓ.எஸ். அப்டேட்டில் வாடிக்கையாளர்கள் பேட்டரி விவரத்தை விரிவாக பார்த்து ஐபோன் வேகத்தை குறைத்து ஐபோன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யும் அம்சத்தை தடுக்க முடியும்.

Similar News