தமிழ்நாடு செய்திகள்

பள்ளி வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் மட்டுமே இருப்பது ஏன்?.. காரணம் இருக்கு!

Published On 2025-10-10 09:51 IST   |   Update On 2025-10-10 09:51:00 IST
  • பள்ளி பேருந்துகளின் மஞ்சள் நிறம் அமெரிக்காவில் தோன்றி உள்ளது.
  • மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்கள் அனைவராலும் கூட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

சாலையில் பல்வேறு வண்ணங்களில் பல வாகனங்களை நாம் கவனித்திருப்போம். ஆனால் பெரும்பாலான பள்ளி பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இருப்பதை கவனித்திருக்கிறோமா? பள்ளி வாகனங்கள் ஏன் மஞ்சள் நிறத்தில் உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க.

ஹவ் ஸ்டஃப் ஒர்க்ஸ் வலைத்தளத்தின் தகவலின்படி, பள்ளி பேருந்துகளின் மஞ்சள் நிறம் அமெரிக்காவில் தோன்றி உள்ளது. 1930-களில், கொலம்பியா பல்கலைக்கழக ஆசிரியர் கல்லூரி பேராசிரியரான ஃபிராங்க் சைர், பள்ளி வாகனங்களை ஆராயத் தொடங்கினார்.

அதுவரை, பள்ளி வாகனங்களின் வடிவமைப்பை, குறிப்பாக பேருந்துகளை தீர்மானிப்பதற்கான குறிப்பிட்ட தரநிலைகள் எதுவும் இல்லை.

பின்னர் அவர் அமெரிக்க பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ஒரு சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்தார். இதில் நாடு முழுவதிலுமிருந்து முக்கிய ஆசிரியர்கள், போக்குவரத்து அதிகாரிகள், பேருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பேருந்தின் நிறத்தை அவர்கள் ஒன்றாகத் தேர்ந்தெடுத்தனர். கல்லூரி பேராசிரியர், கூட்டம் நடைபெற்ற அறையின் சுவரில் பல வண்ணங்களை ஒட்டி, அதில் ஒன்றை அவர்களிடம் தேர்ந்தெடுக்கச் சொன்னார்.

மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்கள் அனைவராலும் கூட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டன. பின்னர் பெரும்பான்மையானவர்கள் மஞ்சள் நிறத்தை தேர்ந்தெடுத்தனர். அதுவே பள்ளி பேருந்துகளின் நிறமாக மாறிவிட்டது. அதனால் தான் பள்ளி பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது.

மஞ்சள் நிறத்தை மனிதர்களால் எளிதில் காண முடியும் என்று விஞ்ஞானிகள் கூறினர். இது அதிகபட்சமாகத் தெரியும் தன்மையைக் கொண்டுள்ளது. மனித கண்களில் கூம்பு வடிவ ஒளி ஏற்பி செல்கள் (cone-shaped photoreceptor cells) இருப்பதே இதற்குக் காரணம். கண்களில் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகியவற்றை வேறுபடுத்திப் பார்க்கக்கூடிய மூன்று வகையான கூம்புகள் உள்ளன. மஞ்சள் ஒளி சிவப்பு மற்றும் பச்சை செல்களை ஒரே நேரத்தில் பாதிப்பதால் பார்ப்பது எளிது என்றும் தெரிவித்தனர்.

மற்ற நிறங்களை விட மஞ்சள் நிறம் மனிதக் கண்ணால் வேகமாக உணரப்படுகிறது. இது மற்ற வாகனங்களை விட பள்ளி பேருந்தை எளிதாக பார்க்கவும், கவனிக்கவும் உதவுகிறது.

Tags:    

Similar News