மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8212 கனஅடியாக அதிகரிப்பு
- காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- அணையில் 83.58 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.
இதற்கிடையே கபினி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் இன்று அதிகாலை முதல் ஒகேனக்கல்லுக்கு வரத்தொடங்கியது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணைக்கு நேற்று வினாடிக்கு 6829 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று வினாடிக்கு 8212 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் 113.57 அடியாக இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இன்று வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போது அணையில் 83.58 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.