தமிழ்நாடு செய்திகள்

விஜய்யின் வீடியோ உரை அரசியல் உள்நோக்கம் கொண்டது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

Published On 2025-10-01 03:15 IST   |   Update On 2025-10-01 03:15:00 IST
  • தனது கட்சி தொண்டர்களை தூண்டி விடும் விதமாகவே அவரது உரை அமைந்துள்ளது.
  • விஜய் அவர்களின் அரசியல் பயணம் குறித்து தமிழக மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்தது என கூறி தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், கரூர் துயரம் குறித்து விஜய் முதல்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் அவர் வீடியோ வெளியிட்டார். அதில் கரூரில் மட்டும் ஏன் நெரிசல் ஏற்பட்டது, உண்மை விரைவில் வெளிவரும் என விஜய் பேசியிருந்தார்.  

 இந்நிலையில் இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது கட்சி நடத்திய நிகழ்வில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகளுக்கும், காயமடைந்தவர்களுக்கும் மாநில அரசும், அரசியல் கட்சிகளும், மக்களும் செய்திட்ட உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதே சரியானதாக இருக்க முடியும்.

தான் மிக மிக தாமதமாக வந்தது குறித்தோ, பரப்புரையின் போது நெரிசலில் மக்கள் சிக்கிக் கொண்டிருந்த நேரத்தில் தனது தொண்டர்களை கட்டுப்படுத்த முயற்சிக்காதது, அவர் உடனடியாக கரூரை விட்டு வெளியேறியதற்கான உரிய காரணங்களைப் பற்றியோ காணொளியில் ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை. இதற்கு மாறாக அவரது உரை என்பது முழுமையான அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது.

உயிர் இழப்புகளுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு மாறாக, அரசு நிர்வாகத்தின் மீது பழி சுமத்துவதாகவே இருக்கிறது. 41 பேர் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை கூட தன்னையும், தன் கட்சி தொண்டர்களையும் பழிவாங்குவதற்கான மாநில அரசின் சதி என்கிறார். தனது கட்சி தொண்டர்களை தூண்டி விடும் விதமாகவே அவரது உரை அமைந்துள்ளது.

இது போன்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட பொறுப்பற்ற கருத்தை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

மதிப்புமிக்க மனித உயிர்கள் பறிபோயுள்ள நிலையில் தலைமைப் பண்பையும், மனித மாண்பையும் வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் விஜய் வெளியிட்டுள்ள காணொளி எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

இத்தகைய உள்நோக்கங்கள் விஜய் அவர்களின் அரசியல் பயணம் குறித்து தமிழக மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News