தமிழ்நாடு செய்திகள்

வல்லக்கோட்டை கோவில் விவகாரம்.. செல்வப்பெருந்தகை வீட்டுக்கு சென்று வருத்தம் தெரிவித்த சேகர்பாபு

Published On 2025-07-09 01:16 IST   |   Update On 2025-07-09 01:16:00 IST
  • நற்பெயருக்கு எந்தக் களங்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், நான் மக்களோடு மக்களாக நின்று தரிசனம் செய்தேன்
  • இச்சம்பவம் குறித்து எந்தவித களங்கமும் ஏற்படுத்த வேண்டாம்.

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர் கோயிலுக்கு சென்ற நிலையில், முதலில் கோயில் மேலே செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிறகு சிறிது நேரம் கழித்து அவர் கோயில் மேலே செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசுகையில், "2 ஆயிரம் ஆண்டுகளாக நீடிக்கும் ஒரு பிரச்சினையை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது. அதிகாரிகள் இந்த விஷயத்தில் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்துள்ளனர். முதலமைச்சரின் நற்பெயருக்கு எந்தக் களங்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், நான் மக்களோடு மக்களாக நின்று தரிசனம் செய்தேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், 08.07.2025 மாலை மாண்புமிகு இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் எனது இல்லத்தில் என்னை சந்தித்தார்.

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அண்ணன் தலைமையில் நடைபெறும் நல்லாட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, வருத்தம் தெரிவித்தார்.

நடைபெற்ற சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அதிகாரிகள் செய்த தவறுக்கு, அனைத்துத் தரப்பினரையும் சமமாக நடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நற்பெயருக்கும், மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கும் இச்சம்பவம் குறித்து எந்தவித களங்கமும் ஏற்படுத்த வேண்டாம். மேலும், இத்துடன் இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். இது குறித்து வருத்தம் தெரிவித்த ஜனநாயக சக்திகளுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News