கூடுதல் தண்ணீர் திறப்பால் 50 அடிக்கு கீழ் சரிந்த வைகை அணை நீர்மட்டம்
- மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
- அணையில் பாசனத்திற்கான நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் 105 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. பருவமழை கைகொடுத்ததால் அணையின் நீர்மட்டம் 70.24 அடிவரை உயர்ந்தது. அதனை தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட பாசனம் மற்றும் குடிநீருக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அவ்வப்போது மழை பெய்தாலும் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் கடந்த அக்டோபர் மாதம் முழு கொள்ளளவில் இருந்த அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து இன்று காலை நிலவரப்படி 49.54 அடியாக உள்ளது. 752 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1969 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 1933 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 744 கனஅடியாக உள்ளது. தம்பதி முல்லை பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் அவர்கள் உடலை தேடும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இதனால் அணையில் பாசனத்திற்கான நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் 105 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதால் நேற்று முதல் பாசனத்திற்கான நீருடன் சேர்த்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் லோயர் கேம்ப்பில் உள்ள நீர்மின் நிலையத்தில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது. 3 ஜெனரேட்டர்கள் மூலம் 90 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 132.20 அடியாக உள்ளது. 5212 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.90 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. மீண்டும் முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் 15 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 35.59 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 14.47 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.