மதுவிலக்கு கொள்கையை உயிர்மூச்சாகக் கொண்டு அதில் உறுதிகுலையாமல் நின்றவர்- திருமாவளவன்
- தனது இறுதிமூச்சு வரையில் காந்தியடிகள் மற்றும் காமராசர் ஆகியோரின் கொள்கை வழியில் பயணித்தவர்.
- தனிப்பட்ட முறையில் என்மீது மாறாத அன்பு செலுத்தியவர்.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குமரி அனந்தன் மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
இலக்கியச் செல்வர்
குமரி அனந்தன் (93) அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. தனது இறுதிமூச்சு வரையில் காந்தியடிகள் மற்றும் காமராசர் ஆகியோரின் கொள்கை வழியில் பயணித்தவர். மதுவிலக்கு கொள்கையை உயிர்மூச்சாகக் கொண்டு அதில் உறுதிகுலையாமல் நின்றவர். அண்மையில் விடுதலைச் சிறுத்தைகளின் மகளிர் அணி நடத்திய "மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டுக்கு" ஆதரவு தெரிவித்து வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அத்துடன், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பாராட்டினார்.
"இவர்கள் சிறுத்துப் போவார்கள் என்றெண்ணி ஆதிக்க சக்திகள் இவர்களை அடக்கி ஒடுக்கினார்கள்; ஆனால், இவர்களோ சிறுத்துப் போகவில்லை; மாறாக, சிறுத்தையானார்கள்" -என்று எம்மை ஊக்கப்படுத்தியவர். தனிப்பட்ட முறையில் என்மீது மாறாத அன்பு செலுத்தியவர்.
அவருடைய இழப்பு தமிழ்ச் சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் காந்தி- காமராசர் வழிவந்த தொண்டர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இலக்கியச்செல்வருக்கு எமது செம்மாந்த வீரவணக்கம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.