தமிழ்நாடு செய்திகள்

ராட்சத ராட்டினத்தில் அந்தரத்தில் தொங்கிய மக்கள் - பொழுதுபோக்கு மையத்தை மூட போலீஸ் உத்தரவு

Published On 2025-05-28 08:29 IST   |   Update On 2025-05-28 09:07:00 IST
  • 120 அடி உயரத்தில், அந்தரத்தில் தொங்கிய பொதுமக்கள் அச்சத்தில் கூச்சலிட்டனர்.
  • தகவல் அறிந்ததும் நீலாங்கரை போலீசாரும், துரைப்பாக்கம், கிண்டி, நீலாங்கரை தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

சென்னை:

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு மையத்தில் ராட்சத ராட்டினம் உள்ளது. இந்த ராட்டினம் செங்குத்தாக மேலே சென்று கீழே இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 7 மணி அளவில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த ராட்டினத்தில் ஏறி இருந்தனர். ராட்டினம் சுமார் 120 அடி உயரத்துக்கு சென்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மேலேயே நின்று விட்டது.

இதனால் 120 அடி உயரத்தில், அந்தரத்தில் தொங்கிய பொதுமக்கள் அச்சத்தில் கூச்சலிட்டனர். இதைப்பார்த்து கீழே நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து தொழில்நுட்ப கோளறாரை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் அந்தரத்தில் தொங்கியவர்களில் சிலர், நடந்த சம்பவம் குறித்து தங்களது செல்போன் மூலம் போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் நீலாங்கரை போலீசாரும், துரைப்பாக்கம், கிண்டி, நீலாங்கரை தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் ராட்சத ராட்டினத்தில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருந்தவர்களை 'பிராண்டோ லிப்ட்' மூலமாக மீட்டனர். 3 மணி நேரத்துக்கு பின்னர் அவர்கள் கீழே வந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தனியார் பொழுதுபோக்கு நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நீலாங்கரை காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில், பொழுதுபோக்கு மையத்தை தற்காலிகமாக மூட அதன் நிர்வாகத்திற்கு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News