ஆழியார் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்
- ஆழியாறு ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
- தற்போது 2-வது முறையாக நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள தொகுப்பு அணைகளில் ஆழியாறு அணையும் ஒன்று.
இந்த அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு, பழைய ஆயக்கட்டு மற்றும் கேரள மாநிலத்தில் சித்தூர் தாலுகா பகுதிகளுக்கு பாசனத்திற்கு நீர் வழங்கப்படுகிறது.
ஆழியார் ஆறு பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, கோவை பகுதிகளில் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
ஆழியார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேல் ஆழியாறு, நவமலை, காடம்பாறை மற்றும் சர்க்கார்பதி பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நவமலை ஆறு, கவியருவி மற்றும் வனப்பகுதியில் உள்ள சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக வேகமாக உயர்ந்து வந்தது. நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 1600 கனஅடி நீர் வரத்து இருந்ததால் அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்தது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டு வினாடிக்கு 1000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
இதையடுத்து ஆழியாறு ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. மேலும் மக்கள், கால்நடைகளை ஆற்றின் கரையோரத்தில் மேய்ச்சலுக்கு விடுவது, ஆற்றில் இறங்கி குளிப்பது மற்றும் துணி துவைப்பது ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நீர்வளத்துறை அதிகாரிகள் அணையின் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் ஆழியார் அணை நிரம்பி 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 2-வது முறையாக நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.