படுகாயம் அடைந்த மீனவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது எடுத்தபடம்.
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்- செல்போன், ஜி.பி.எஸ். கருவி பறிப்பு
- மீனவர்கள் நள்ளிரவு வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே, சுமார் 15 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
- கரை திரும்பிய பிரகதீஸ், சாந்தகுமார் ஆகிய 2 மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகபட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் பிடிஏ சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த வெண்ணிலா என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் செருதூர் சிங்காரவேலன் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 49), பிஎஸ்என்எல் சுனாமி குடியிருப்பை சேர்ந்த இடும்பன் (47), ரெத்தினம் (25) பிடிஏ சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த கணேசன் (55) ஆகிய 4 பேரும் கடந்த 10-ந்தேதி காலை கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டுச் சென்றனர். நேற்று நள்ளிரவு வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே, சுமார் 15 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு ஒரு பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 பேர் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த 4 மீனவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களிடம் செல்போன் மற்றும் தொழில் நுட்ப கருவிகளை கேட்டனர். அவர்கள் தரமறுத்ததால் மீனவர்களை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி செல்போன், ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி, டார்ச் லைட் ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர். இந்நிலையில் இன்று காலையில் அவர்கள் கரை திரும்பினர். கடற்கொள்ளையர்களால் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன், இடும்பன், கணேசன் ஆகிய 3 மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இது குறித்து கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்...
இதைப்போல் செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த பிரகதீஸ் (வயது 25), திரிசெல்வம் (44), சுந்தரவேல் (30), மீனவர் காலனி வெல்லப்பள்ளத்தை சேர்ந்த சாந்தகுமார் (28), அந்தோணிராஜ் ஆகிய 4 பேரும் கடந்த 10-ந்தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அவர்கள் நேற்று இரவு வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே, சுமார் 15 நாட்டிகள் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 4 மீனவர்களையும் தாக்கி கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடமிருந்து 200 கிலோ எடையுள்ள மீன்பிடி வலை, செல்போன்கள், பேட்டரி, டார்ச் லைட், சார்ஜர், பெட்ரோல் கேன், ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர்.
இன்று காலை கரை திரும்பிய பிரகதீஸ், சாந்தகுமார் ஆகிய 2 மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைப்போல் செருதூரில் இருந்து சென்ற மற்றொரு பைபர் படகில் இருந்து 4 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களிடமிருந்து மீன்பிடி வலை மற்றும் தொழில் நுட்பபொருட்களை பறித்து சென்றனர். இது தொடர்பாக கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் செருதூர் மீனவர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இனிவரும் காலங்களில் இந்த சம்பவம் நடக்காமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.