தமிழ்நாடு செய்திகள்

தென்மேற்கு பருவமழை வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது: வானிலை ஆய்வாளர் கணிப்பு

Published On 2025-05-01 13:12 IST   |   Update On 2025-05-01 13:12:00 IST
  • வெப்ப அலையின் தாக்கம் தமிழகத்தில் இருக்காது.
  • மே 15-ந்தேதி மத்திய வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெப்பம் வாட்டி எடுத்து வருகிறது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது கோடை வெப்பத்தை பெரியளவில் தணிக்கவில்லை. கடலோரப் பகுதிகளிலும் தொடர்ந்து அதிக வெப்பநிலை நீடித்து வருகிறது.

இதற்கிடையே வருகிற 18-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்த மாதம் இயல்பான வெப்பம் நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வெப்ப அலையின் தாக்கம் தமிழகத்தில் இருக்காது.

தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் நிலவும் கோடை வெப்பச்சலன மழை மே 8-ந்தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக பகலில் வெயில் சுட்டெரித்தாலும் இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும். 2-வது வாரத்தில் மழைப்பொழிவு குறைந்து வெப்பநிலை உயரக்கூடும்.

ஆனால் மே 15-ந்தேதி மத்திய வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வருகிற 18-ந்தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் மேற்கு காற்றின் ஊடுருவல் மே மத்தியில் படிப்படியாக தொடங்கும். அதனை தொடர்ந்து இந்த மாத இறுதியில் கேரளா, தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த மாதத்தில் இயல்பான வெப்பமும், இயல்பிற்கு அதிமான கோடை மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்திய மாநில மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது.

இரவு நேரங்களில் வீடுகளில் கடுமையான வெப்பமும் வாட்டி எடுக்கிறது. இதனால் குளிர்சாதன வசதி இல்லாத அறைகளில் தூங்குபவர்கள் வியர்வை மழையில் நனைய வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டு உள்ளனர். பலர் வீடுகளில் மொட்டை மாடிகளில் காற்றுக்காக இரவு நேரங்களில் தூங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News