கடலூர் தேவனாம்பட்டினம் கடல் அரிப்பால் ஊருக்குள் தண்ணீர் செல்லும் அபாயம் உள்ளதை காணலாம்.
கடல் சீற்றத்தால் மண் அரிப்பு- தேவனாம்பட்டினம் ஊருக்குள் தண்ணீர் செல்லும் அபாயம்
- பொதுமக்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்ட சிமெண்ட் கற்கள் வரை வந்து செல்வதை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
- கடற்கரை ஓரமாக தண்ணீர் உட்புகாத வகையில் கருங்கல்கள் கொட்டப்பட்டு வருகின்றன.
கடலூர்:
வங்கக்கடலில் கடந்த பல நாட்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலம் மற்றும் புயல் போன்றவற்றால் தொடர்ந்து கடல் அலை அதீத சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. மேலும் கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் கடலில் வழக்கத்தை விட அதிக அளவில் தண்ணீர் உட்புகுந்து உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டு வருவதால் கடல் அலை முன்னோக்கி வந்து சென்றதால் மண் அரிப்பு அதிகளவில் ஏற்பட்டு வந்தது. தற்போது நாளுக்கு நாள் சீற்றம் அதிகரித்து காணப்பட்டு வருவதால் சுமார் 40 அடிக்கு கடல் அலை முன்னோக்கி பொதுமக்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்ட சிமெண்ட் கற்கள் வரை வந்து செல்வதை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
இது ஒரு புறம் இருந்து வரும் நிலையில் மற்றொரு புறம் தேவனாம்பட்டினம் ஊருக்குள் மீன் விற்பனை செய்யும் இடம் உள்ளது. அதன் அருகாமையில் மீன் வலை பின்னும் கட்டிடமும் செயல்பட்டு வருகின்றது. தற்போது கடல் அலை அதிகளவில் சீறி பாய்ந்து வருவதால் பெரிய அளவில் மண் அரிப்பு ஏற்பட்டு வலை பின்னும் கட்டிடம் கடல் அலையில் அடித்து இழுத்து செல்லும் அவல நிலையில் உள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் தேவனாம்பட்டினம் ஊருக்குள் கடல் நீர் புகுந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் தேவனாம்பட்டினம் ஊர் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து அனைவரும் பார்வையிட்டு சென்று வருகின்றனர்.
மேலும் கடற்கரை ஓரமாக தண்ணீர் உட்புகாத வகையில் கருங்கல்கள் கொட்டப்பட்டு வருகின்றன. அந்த பகுதியை தவிர்த்து மற்ற பகுதிகளில் வேகமாக மண் அரிப்பு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்து வருகின்றது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைவு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.