4 நாட்களில் சேர்வலாறு அணை நீர்மட்டம் 20 அடி உயர்வு
- கடந்த 4 நாட்களில் பாபநாசம் அணை நீர்மட்டம் சுமார் 12 அடி உயர்ந்துள்ளது.
- மாஞ்சோலையில் 18 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. நேற்று அணை நீர்மட்டம் 123 ½ அடியாக இருந்த நிலையில் இன்று 3 ½ அடி உயர்ந்து 127 அடியை எட்டியுள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 3 அடி உயர்ந்து 142.68 அடியை எட்டியுள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 346 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 1,500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
கடந்த 4 நாட்களில் பாபநாசம் அணை நீர்மட்டம் சுமார் 12 அடி உயர்ந்துள்ளது. கடந்த 23-ந்தேதி அணையில் 115 அடி நீர் இருப்பு இருந்த நிலையில் இன்று 127 அடியை எட்டியுள்ளது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த 23-ந்தேதி 122 அடியாக இருந்த நிலையில் இன்று 142.68 அடியை எட்டியுள்ளது.
இதனால் கடந்த 4 நாட்களில் அணை நீர்மட்டம் சுமார் 20 ½ அடி அதிகரித்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 96 அடியை கடந்துள்ளது. மாஞ்சோலை மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 28 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 25 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 22 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலையில் 18 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.