தமிழ்நாடு செய்திகள்

ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை

Published On 2025-02-20 12:14 IST   |   Update On 2025-02-20 12:14:00 IST
  • கருங்கல்பாளையம் போலீசார் சீமான் மீது வழக்கு பதிவு செய்தனர்.
  • எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது போன்ற அடிப்படை விவரங்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 24-ம் தேதி முதல் மார்ச் மாதம் 3-ம் தேதி வரை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பெரியார் குறித்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இரவில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அசோகபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறும் போது, உன் பெரியார் வெங்காயம் வைத்துள்ளார். நான் வெடிகுண்டு வைத்திருக்கிறேன்.

நீ வெங்காயத்தை வீசு. நான் வெடிகுண்டு வீசுகிறேன் என்று பேசினார். இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் சீமான் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருங்கல்பாளையம் போலீசார் சென்னையில் உள்ள சீமான் வீட்டுக்கு சென்று இது குறித்து சம்மன் அளித்தனர். அதில் வியாழக்கிழமை (இன்று) கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று சீமான் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு நேரில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக அவரது வக்கீல் நன்மாறன் ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணை அதிகாரி விஜயனிடம் சீமானின் கடிதத்தை வழங்கினார்.

அந்த கடிதத்தில், ஏற்கனவே தமிழகம் முழுவதும் தொடரப்பட்டுள்ள 70-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒரே இடத்தில் விசாரணை செய்ய வேண்டுமென காவல்துறை இயக்குநரிடம் மனு அளித்திருப்பதாகவும், அந்த மனு மீது முடிவெடுத்து அறிவிக்கும் வரை விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்குமாறும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரணை அதிகாரி விஜயன் பெற்றுக் கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதுகுறித்து சீமான் வக்கீல் நன்மாறன் நிருபர்களிடம் கூறும்போது, புகார் கொடுத்தவர் யார்? எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது போன்ற அடிப்படை விவரங்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை.

இது மட்டுமின்றி சீமான் மீது பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறோம். உரிய உத்தரவு கிடைக்க பெற்றவுடன் விசாரணைக்கு சீமான் ஆஜராவார் என்றும் கூறினார்.

Tags:    

Similar News