அரையாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு
- விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று மாலை முதல் சென்னை திரும்ப தொடங்கினர்.
- 3 மாவட்டங்களில், அரையாண்டு தேர்வுகள் இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வுகளைத் தொடர்ந்து, டிசம்பர் 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. இதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.
பள்ளிகள் இன்று திறக்கப்படுவதையொட்டி பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் நேற்று மாலை முதல் சென்னை திரும்ப தொடங்கினர். இதேபோல பல்வேறு இடங்களுக்கு புத்தாண்டை கொண்டாடச் சென்றவர்களும் ஒரே நேரத்தில் சென்னை திரும்பியதால் பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளி மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வருகை தந்தனர்.
இதனிடையே ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த மாவட்டங்களில், அரையாண்டு தேர்வுகள் இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.