தமிழ்நாடு செய்திகள்

கடந்த ஏப்ரல் மாதம் ரூ.11 ஆயிரம் கோடிக்கு ஆயத்த ஆடை வர்த்தகம்- உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

Published On 2025-05-17 14:02 IST   |   Update On 2025-05-17 14:02:00 IST
  • திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியும் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
  • கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு ஏற்றுமதியாகியுள்ளது.

திருப்பூர்:

இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் மாதந்தோறும் கணக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ரூபாய் மதிப்பில் 17.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது கடந்த 2024-25-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.9 ஆயிரத்து 995 கோடியே 40 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்துள்ளது. நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதம் ரூ.11 ஆயிரத்து 733 கோடியே 40 லட்சத்துக்கு ஆயத்த ஆடை வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியும் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு ஏற்றுமதியாகியுள்ளது. பின்னலாடை வர்த்தகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) துணை தலைவர் சக்திவேல் கூறியதாவது:-

அமெரிக்காவின் வரி உயர்வு கொள்கை மற்றும் வங்கதேச உள்நாட்டு குழப்பங்கள் போன்ற பிரச்சனைகளுக்கு இடையிலும், நமது பின்னலாடை ஏற்றுமதியாளர்களின் சிறந்த செயல்திறனால் பின்னலாடைத்துறை புதிய நிதியாண்டிலும் வலுவான வளர்ச்சிப்பாதையில் தொடர்கிறது. அதாவது கடந்த ஏப்ரல் மாதம் 1.37 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு 1.20 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 15 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது. இந்த சீரான, நிலையான மாதாமாத வளர்ச்சி தொடரும்போது, திருப்பூர் பின்னலாடை வர்த்தக இலக்கான ரூ.50 ஆயிரம் கோடியை இந்த நிதியாண்டில் எட்டுவதில் எந்தவித தடையும் இருக்காது. நடப்பு ஆண்டின் தொடக்க மாதமே வளர்ச்சியோடு தொடங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News