தமிழ்நாடு செய்திகள்

மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கோலமிடும் காட்சி

குப்பை கொட்டப்படும் இடங்களில் ரங்கோலி கோலங்கள் - விழிப்புணர்வை ஏற்படுத்த மாநகராட்சி புதிய முயற்சி

Published On 2025-07-30 12:21 IST   |   Update On 2025-07-30 12:21:00 IST
  • 80 இடங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இயங்கும் சி.சி.டி.வி. கேமராக்கள் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.
  • மாற்றங்கள் மக்களின் மனதில் இருந்து வந்தால் மட்டுமே இது போன்ற முயற்சிகள் பலனளிக்கும்.

மதுரை:

சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய அரசின் தூய்மை நகரங்கள் பட்டியலில் மதுரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் கடைசி இடமான 40-வது இடத்தை பிடித்தது. இது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நகரின் தூய்மை பணிகளை மேம்படுத்தும் பணியில் மாநகராட்சி கவனம் செலுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் அழகிய ரங்கோலி கோலங்கள் போடப்பட்டு வருகின்றன. இது ஓரளவுக்கு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்ப டுத்தி வருவதாக மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட தூய்மை நகரங்களின் பட்டியல் கடந்த 2024-ம் ஆண்டு தரவுகளைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. எனினும் தற்போது மதுரை மாநகரில் தூய்மை பணிகளை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நகரில் குப்பைகள் கொட்டப்படும் இடங்கள் 1,152லிருந்து 749 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக குப்பைகள் பெறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதே போல், கட்டுமான பகுதிகளில் தூசியை குறைக்கும் பொருட்டு பச்சை நிற துணியை பயன்படுத்தாத கட்டுமான நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ச்சியான குற்றங்களுக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. சமீபத்தில் கட்டுமான பகுதிகளில் பச்சை நிற துணியை பயன்படுத்துவதை மாநகராட்சி கட்டாயப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே போல், மதுரையில் 80 இடங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இயங்கும் சி.சி.டி.வி. கேமராக்கள் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குப்பைகள் நிரம்பி வழியும்போது, அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அகற்ற ஏதுவாகிறது. இதே போல் மாநகராட்சி ஊழியர்களின் பணிகளை கண்காணிக்க நகரம் முழுவதும் 200 கியூ.ஆர். கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. குப்பைகள் அதிகம் போடப்படும் இடங்களில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அழகிய ரங்கோலி கோலங்கள் போடப்பட்டு வருகின்றன. வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ இந்த கோலங்கள் போடப்படும் என்றார்.

மாநகராட்சியின் இந்த முயற்சிகள் குறித்து நேதாஜி ரோட்டைச் சேர்ந்த குடியிருப்புவாசி ஒருவர் கூறுகையில், மாநகராட்சியின் இந்த முயற்சி ஓரளவுக்கு பயன் அளித்தாலும், முழுமையாக பயன் தரவில்லை என்பதே உண்மை. ரங்கோலி கோலங்கள் போடப்படும் இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவது குறைந்துள்ளது. எனினும் சிலர் அவற்றை மதிக்காமல் தொடர்ந்து குப்பைகள் போடப்படும் நிகழ்வுகள் தொடர்கின்றன. மாற்றங்கள் மக்களின் மனதில் இருந்து வந்தால் மட்டுமே இது போன்ற முயற்சிகள் பலனளிக்கும் என்றார்.

இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், இந்த முயற்சி கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அமல்படுத்தட்டது. அதே போன்ற முறை இங்கு முயற்சிக்கப்படுவது கண்டு மகிழ்ச்சி. எனினும் குப்பைகள் அகற்றப்படுவதை முறைப்படுத்தாமல் இது போன்ற முயற்சிகள் வீணாகவே முடியும். ஏனெனில் மதுரை மாநகராட்சியின் பல வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் பணி செய்வதில்லை. ஒரு வார்டுக்கு 5 பணியாளர்கள் அனுப்பப்பட்டால் அவர்களில் 2 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர் என்றார்.

Tags:    

Similar News