அகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் இடைவிடாது பெய்யும் மழை - அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு
- ராதாபுரம், நாங்குநேரி சுற்று வட்டாரத்திலும் இடைவிடாமல் நேற்று பகலில் இருந்து மழை பெய்து வருகிறது.
- அகஸ்தியர் அருவியில் தற்போது தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிக்கு செல்லும் பாதை நீரில் மூழ்கியுள்ளது.
நெல்லை:
டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பகல் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து விட்டு விட்டு சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது.
இரவிலும் தொடர்ந்து பெய்த மழை இன்றும் காலையில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மூலைக்கரைப்பட்டி, களக்காடு, சேரன்மகாதேவி, கன்னடியன் கால்வாய் பகுதியில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக 16 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ராதாபுரம், நாங்குநேரி சுற்று வட்டாரத்திலும் இடைவிடாமல் நேற்று பகலில் இருந்து மழை பெய்து வருகிறது. இன்றும் காலையில் மழை தொடர்கிறது.
நெல்லை மாநகர பகுதியை பொறுத்தவரை டவுன், பேட்டை, வண்ணார்பேட்டை, சந்திப்பு, பாளையங்கோட்டை என அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
அதேநேரம் மழையின் தாக்கத்தை விட குளிரின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. நேற்று பகல் நேரங்களில் சாலைகளில் வாகனம் தெரியாத அளவுக்கு மேகக்கூட்டம் அதிகமாக காணப்பட்ட நிலையில், இரவில் மிக கடுமையான குளிர் வாட்டிவதைத்தது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நவம்பர் மாதத்தில் 20 டிகிரி செல்சியஸ் வரையிலும் குளிர் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் மழை குறைந்தபோதிலும் மணிமுத்தாறு அருவியில் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாகவே இருப்பதால் மணிமுத்தாறு அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அருவியினை பார்வையிடுவதற்கு மட்டும் விரும்புபவர்களுக்கு பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அகஸ்தியர் அருவியில் தற்போது தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிக்கு செல்லும் பாதை நீரில் மூழ்கியுள்ளது. இதையடுத்து அகஸ்தியர் அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சொரிமுத்து அய்யனார் கோவில் செல்லும் பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தென்காசி மாவட்டதிலும் நேற்று பகலில் தொடங்கி இன்றும் 2-வது நாளாக இடைவிடாமல் சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. 3 நாட்களாக மாவட்டத்தில் சூரியன் தலை காட்டாத நிலையில், கடுமையான குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இரவிலும் வாட்டிவதைக்கும் குளிரின் காரணமாக முதியவர்களும், பச்சிளம் குழந்தைகளை வைத்திருப்பவர்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
மாலை 4 மணிக்கே வானம் இருட்டாக மாறி விடுவதால் வாகனங்கள் சாலைகளில் செல்லும்போது முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றன. மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பிவிட்ட நிலையில், விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கடலோர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏராளமான குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. குறிப்பாக காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், சூரன்குடி சுற்று வட்டாரங்களில் 7 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம், மணியாச்சி, ஓட்டப்பிடாரம் சுற்றுவட்டாரங்களில் 2-வது நாளாக கடும் குளிர் வாட்டி வதைப்பதோடு இடைவிடாது சாரல் மழையும் பெய்து வருகிறது.
சாயர்புரம் பகுதியில் பெய்த மழையால் குளங்கள், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. உடன்குடி சுற்றுவட்டாரத்தில் 13 குளங்கள் இந்த ஆண்டாவது நிரம்பிவிடுமா என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கருமேனி ஆற்றில் தண்ணீர் வந்தால் தான் குளங்கள் நிரம்பும் என்பதால் மக்கள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.