தமிழ்நாடு செய்திகள்

ஸ்ரீரங்கம் கோவிலில் நாளை மறுநாள் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்

Published On 2025-09-01 14:29 IST   |   Update On 2025-09-01 14:29:00 IST
  • தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக 10-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
  • ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை ஹெலிபேடு தளத்தை தஞ்சாவூர் ஹெலிபேடு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருச்சி:

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகிறார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், நாளை மறுநாள் (புதன்கிழமை) சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு காலை 10.55 மணிக்கு வருகிறார்.

அவரை மாவட்ட கலெக்டர் வே.சரவணன், அமைச்சர்கள் வரவேற்கின்றனர். தொடர்ந்து, பகல் 12.10 மணியளவில் ஹெலிகாப்டரில் திருவாரூர் சென்று, தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக 10-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.

பின்னர், அவர் திருவாரூரில் இருந்து மாலை 4.30-க்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றின் பஞ்சக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து காரில் மாலை 5.20-க்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்யும் திரவுபதி முர்மு, மாலை 6 மணிக்கு கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றடைகிறார். திருச்சி விமான நிலையத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு, இரவு 7 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை ஹெலிபேடு தளத்தை தஞ்சாவூர் ஹெலிபேடு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம், ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை, ரெங்கநாதர் கோவில் மற்றும் அவர் காரில் செல்லும் வழிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

Tags:    

Similar News