தமிழ்நாடு செய்திகள்

குன்னூர் அருகே மலையில் இருந்து சறுக்கி விழுந்து கர்ப்பிணி யானை பலி

Published On 2025-09-16 12:41 IST   |   Update On 2025-09-16 12:41:00 IST
  • ஒரு குட்டியுடன் 3 யானைகள் அந்த இடத்தை முகாமிட்டது.
  • இறந்த யானையின் உடலை எடுக்க விடாமல் அந்த யானைகள் அரண்போல் நின்றன.

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் பல குழுக்களாக சுற்றி வருகிறது. குன்னூர் அருகே கோழிக்கரை பழங்குடியின கிராமத்தில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.

நேற்று மாலை மலைச்சரிவில் சென்ற கர்ப்பிணி யானை கால் இடறி தவறி விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே யானை பலியானது. அதன் வயிற்றில் இருந்த குட்டியும் இறந்தது.

இதை பார்த்த பழங்குடி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையிலான ஊழியர்கள் விரைந்து சென்று யானையின் உடலை மீட்க முயன்றனர்.

அப்போது ஒரு குட்டியுடன் 3 யானைகள் அந்த இடத்தை முகாமிட்டது. இறந்த யானையின் உடலை எடுக்க விடாமல் அந்த யானைகள் அரண்போல் நின்றன.

சுமார் 2 மணி நேரம் போராடி அந்த யானைகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர். இதையடுத்து முதுமலை கால்நடை டாக்டர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இறந்த யானையின் உடலை பரிசோதனை செய்த பிறகு அந்த இடத்திலேயே புதைப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இந்த பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து சுற்றி வருவதால் வன ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News