கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போலீசார் கடும் கட்டுப்பாடு
- கோவையில் ரேஸ்கோர்ஸ், வாலாங்குளம், உக்கடம் குளம் போன்ற இடங்களில் அதிகளவில் மக்கள் திரண்டு புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.
- அனுமதி இல்லாமல் பொது இடத்தில் வைத்து புத்தாண்டு கொண்டாடக்கூடாது.
குனியமுத்தூர்:
2025 புத்தாண்டு பிறக்க இன்னும் 5 நாட்களே உள்ளன. தமிழகத்தில் சென்னையை அடுத்து பெரிய நகரமான கோவையும் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தை விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இன்னிசை கச்சேரி, சிறப்பு பாடகர்கள் வருகை, பபே உணவு முறை, வாணவேடிக்கை என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான முன்பதிவும் தொடங்கி நடந்து வருகிறது.
இதேபோல கோவையில் ரேஸ்கோர்ஸ், வாலாங்குளம், உக்கடம் குளம் போன்ற இடங்களில் அதிகளவில் மக்கள் திரண்டு புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். இதில் பெண்கள், சிறுவர், சிறுமிகள் என ஏராளமானோர் பங்கேற்பார்கள்.
அந்த சமயங்களில் இளைஞர்கள் பைக்ரேஸ், பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது, கூட்டத்தை பயன்படுத்தி ஜேப்படி செய்வது, போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதனை தடுக்கும் விதமாக கோவையில் புத்தாண்டு அன்று இரவு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட மேம்பாலங்களில் நள்ளிரவில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கவும் போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இளைஞர்கள் மேம்பாலங்களை குறிவைத்து பைக்ரேஸ் நடத்த வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும், ஹெல்மெட் அணியாமல் செல்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுக்கும் வகையில் ஓட்டல், லாட்ஜ்களில் தீவிர சோதனையும் நடத்தப்படுகிறது. சந்தேக நபர்கள் யாராவது வந்து சென்றால் தகவல் தெரிவிக்குமாறு ஓட்டல் ஊழியர்களிடம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையே சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதன்காரணமாக எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பை அதிகரிக்கவும், புத்தாண்டு கொண்டாட்டங்களில் கட்டுப்பாடு விதிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக கோவை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் அஜய் தங்கத்திடம் பேசியபோது அவர் கூறியதாவது:-
புத்தாண்டு கொண்டாட்டம் என்பது அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய ஒன்று. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதே சமயத்தில் அது எல்லை மீறுவதாக இருக்கக் கூடாது. பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம்வயதினர் நள்ளிரவு 12 மணி வரும்போது, உற்சாக மிகுதியில் புத்தாண்டை கொண்டாட முயல்வார்கள். நடுரோட்டில் வைத்து கேக் வெட்டி கொண்டாடுவது மற்றும் பைக் ரேஸ் போன்ற சாகச செயல்களில் ஈடுபட்டு, பொது மக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு எல்லை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது. அதிவேகமாக வாகனங்களை இயக்கக் கூடாது. அனுமதி இல்லாமல் பொது இடத்தில் வைத்து புத்தாண்டு கொண்டாடக்கூடாது.
மேலும் சிலர் புத்தாண்டு கொண்டாட குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு, வெளியே கோவில் மற்றும் பொது இடங்களுக்கு சென்று மகிழ்வது உண்டு. அவ்வாறு வீட்டை பூட்டி விட்டு செல்லும்போது காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விலை உயர்ந்த நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை வீட்டில் வைத்து விட்டுச் செல்லக்கூடாது. நாமும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பிறர்க்கும் தொந்தரவு கொடுக்காத நிலையில் புத்தாண்டை கொண்டாட வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் சட்டத்தை மீறுவதை காவல்துறை ஒருபோதும் அனுமதிக்காது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், அசம்பாவித செயல்களை தடுக்கும் பொருட்டு, அன்றைய தினம் நள்ளிரவு கோவை மாநகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. எனவே பொதுமக்களின் அமைதியை சீர்குலைக்க முயல்பவர்கள், சட்டத்தின் முன் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.