தமிழ்நாடு செய்திகள்

தொழிலாளி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - போலீசார் விசாரணை

Published On 2025-06-07 14:44 IST   |   Update On 2025-06-07 14:44:00 IST
  • அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், இளங்கோ தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
  • மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் திடீரென சுந்தரம் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி சென்றது.

நெல்லை:

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அடைச்சாணி கிராமத்தில் யாதவர் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 58). இவருக்கு இளங்கோ (22), தமிழன் ( 21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இவர்கள் 2 பேரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் அடைச்சானி அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு தனது நண்பர்களுடன் சென்றனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், இளங்கோ தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்படவே கோவிலில் நின்று கொண்டிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இளங்கோவன் தமிழனும் தங்களது வீட்டுக்கு வந்து விட்டனர். அன்று இரவில் சுந்தரம் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்ட நிலையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் திடீரென சுந்தரம் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி சென்றது.

இதில் அவர்கள் வீசிய பெட்ரோல் குண்டு சுந்தரம் வீட்டின் கதவு மீது விழுந்து தீப்பற்றி எரிந்தது. சத்தம் கேட்டு சுந்தரம் குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்து தீயை அணைத்தனர். அதனைத் தொடர்ந்து சுந்தரம் ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசி விட்டு சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தன்று கோவில் திருவிழாவில் தகராறு நடந்துள்ளதால் அந்த முன்விரோதத்தில் யாரேனும் பெட்ரோல் குண்டு வீசினார்களா? என்பது தொடர்பாக அதில் சம்பந்தப்பட்ட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News