வேதாரண்யத்தில் இந்த ஆண்டு 2½ லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே உப்பு உற்பத்தி ஆனது
- வேதாரண்யத்தில் உற்பத்தி பணிகள் பலமுறை பாதிக்கப்பட்டது.
- மழைக்கால விற்பனைக்காக 15 ஆயிரம் மெட்ரிக் டன் உப்பு மட்டுமே இருப்பு உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் இந்த ஆண்டு 2½ லட்சம் மெட்ரிக் டன் உப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விபரம் வருமாறு:-
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய இடங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் உணவுக்கு தேவையான உப்பும், 6 ஆயிரம் ஏக்கரில் தொழிற்சாலைக்கு தேவையான உப்பும் என மொத்தம் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பணிகள் நடைபெறுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு தினமும் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திற்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் உப்பு உற்பத்தி பணிகள் ஜனவரியில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு வேதாரண்யம் பகுதியில் அடிக்கடி பெய்த மழையால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் உற்பத்தி பணிகள் பலமுறை பாதிக்கப்பட்டது. மேலும், வழக்கம்போல் ஜனவரி மாதம் தொடங்கிய உற்பத்தி பணிகள் அக்டோபர் முதல் வாரத்திலேயே நிறுத்தப்பட்டது.
கடந்த 8 மாதங்களில் உணவு தேவைக்கான உப்பு 2 லட்சம் மெட்ரிக் டன், தொழிற்சாலைக்கு தேவையான உப்பு 4 லட்சம் மெட்ரிக் டன் என மொத்தம் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால், எதிர்பாராத விதமாக அடிக்கடி பெய்த மழையால் உணவு தேவைக்கான உப்பு 50 ஆயிரம் மெட்ரிக் டன், தொழிற்சாலைக்கு தேவையான உப்பு 2 லட்சம் மெட்ரிக் டன் என மொத்தம் 2½ லட்சம் மெட்ரிக் டன் உப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
அகஸ்தியன்பள்ளியில் இருப்பு உள்ள உப்பு பனை மட்டை தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ள காட்சி.
மழைக்கால விற்பனைக்காக 15 ஆயிரம் மெட்ரிக் டன் உப்பு மட்டுமே இருப்பு உள்ளது. குறைந்த அளவு இருப்பு உள்ள உப்பை சேமித்து, உப்பு மழையில் கரைந்து விடாமல் இருக்க பனைமட்டை மற்றும் தார்ப்பாய் கொண்டு பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளது. இனி அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் தான் உப்பு எடுக்க இயலும். இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி நிறைவு பெற்றது. குறைந்த அளவே உணவுக்கு தேவையான உப்பு இருப்பு இருந்தாலும் தற்போது ஒரு டன் உப்பு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரத்து 500 வரை மட்டுமே விற்பனையாகிறது. உப்பு உற்பத்தியும் குறைந்து, உப்புக்கான விலையும் அதிகரிக்காதது மிகவும் கவலை அளிக்கிறது என்றனர்.