15 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனை: அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் நகை, பணம் சிக்கவில்லை
- அமைச்சரின் குடும்பத்திற்கு சொந்தமான 3 மில்களிலும் சோதனை நடந்தது.
- நிறுவனத்தின் வங்கி கணக்குகள், செல்போன்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
தமிழக ஊரக வளர்ச்சி த்துறை அமைச்சரும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான ஐ.பெரியசாமியின் சென்னை மற்றும் திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரம் துரைராஜ் நகரில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
இதேபோல் திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள அவரது மகனும், பழனி தொகுதி எம்.எல்.ஏ.வுமான செந்தில்குமார் வீடு, வள்ளலார் நகரில் உள்ள அமைச்சரின் மகள் இந்திரா வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையிட்டனர்.
மேலும் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் உள்ள அமைச்சரின் குடும்பத்திற்கு சொந்தமான 3 மில்களிலும் சோதனை நடந்தது. இது பற்றி அறிந்ததும் அமைச்சர் அர.சக்கரபாணி அங்கு சென்றார். மேலும் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் அமைச்சர் வீட்டு முன்பு குவிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
நேற்று காலை தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை சுமார் 15 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அப்போது வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. போலீசார் வெளியே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் முக்கிய சொத்து ஆவணங்கள், முதலீடு குறித்த ஆவணங்கள், நிறுவனத்தின் வங்கி கணக்குகள், செல்போன்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளது. பணம், நகை எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.