நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்: 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
- வினாத்தாள் கசிந்ததற்கு காரணமானவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் 106 கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
தற்போது ஏப்ரல் மாத செமஸ்டர் தேர்வுகள் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் நடந்து வரும் நிலையில் கடந்த 27-ந்தேதி பி.காம் பட்டப்படிப்புக்கான தொழில் சட்டம் எனும் இண்டஸ்டிரியல்லா என்ற பாடத்தின் தேர்வு நடைபெற இருந்தது. இந்த நிலையில் வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது.
இதனிடையே பல்கலைக்கழக தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் கடந்த 26-ந்தேதி இரவு 10 மணிக்கு பல்கலைக்கழக தேர்வாணையர் செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு நம்பரில் இருந்து மறுநாள்(27-ந்தேதி) நடக்க இருந்த தொழில்சட்டம் பாடத்திற்கான வினாத்தாள் அனுப்பப்பட்டதாகவும், இதனால் அந்த தேர்வினை ரத்து செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வினாத்தாள் கசிந்ததற்கு காரணமானவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சாக்ரடீஸ் அளித்த புகாரின் அடிப்படையில் நெல்லை பேட்டை போலீசார் புதிய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகள் 316 (நம்பிக்கைக்கு மோசடி செய்தல்), 318(ஏமாற்றுதல்), 3(5), தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வுகள் சட்டம் 3,4 மற்றும் 5(தேர்வில் முறைகேடு) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தேர்வாணையரின் செல்போன் வாட்ஸ்அப்புக்கு வினாத்தாள் அனுப்பிய எண்ணை சோதனை செய்தபோது அது அறிவுச்செல்வன் மதுரை என்ற பெயர் வருவதாகவும், அந்த நம்பரை வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.