தமிழ்நாடு செய்திகள்

நாங்குநேரி மாணவன் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்: போலீசார் குவிப்பு

Published On 2025-04-17 00:28 IST   |   Update On 2025-04-17 00:28:00 IST
  • ரெட்டியார்பட்டி மலைப்பகுதிக்கு வரவழைத்த 5 பேர் கொண்ட கும்பல் சின்னதுரையை சரமாரி தாக்கியது.
  • காயமடைந்த சின்னதுரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டி மகன் சின்னதுரை. கடந்த 2023-ம் ஆண்டு அரசு பள்ளியில் படித்தபோது, அதே பள்ளியில் படித்து வந்த வேறு சமுதாய மாணவர்கள் சிலர் சின்னதுரையை அவரது வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் வெட்டினர். இதைத்தடுக்க முயன்ற அவரது தங்கையையும் வெட்டினர்.

இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதன்பின், சிகிச்சை பெற்று குணமடைந்து தனது படிப்பை தொடர்ந்த சின்னதுரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 78 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார்.

இந்நிலையில், நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. சின்னதுரையை ரெட்டியார்பட்டி மலைப்பகுதிக்கு வரவழைத்து 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த சின்னதுரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக, நெல்லை மாநகர துணை ஆணையர் சாந்தாராம் மற்றும் உதவி ஆணையர் சுரேஷ் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். தாக்குதல் நடத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News