தமிழ்நாடு செய்திகள்

நாகர்கோவிலில் இன்று ஷோரூமில் தீ விபத்து-16 கார்கள் எரிந்து சேதம்

Published On 2025-06-26 10:39 IST   |   Update On 2025-06-26 10:39:00 IST
  • தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
  • கார் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது பற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டனர்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் ஏ.ஆர்.கேம்ப் ரோட்டில் கார் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது. இங்கு தினமும் ஏராளமான கார்கள் சர்வீஸ் செய்வதற்கும் பழுது நீக்குவதற்கும் கொண்டு வரப்படும். நேற்று 50-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. மாலை வேலை முடிந்து ஊழியர்கள் வீட்டிற்கு சென்றனர். காவலாளிகள் 2 பேர் பணியில் இருந்தனர்.

இன்று அதிகாலை 2 மணி அளவில் கார் ஷோரூமில் இருந்து திடீரென தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்த காவலாளிகள் அங்கிருந்த தீயணைப்பு கருவி மூலமாக தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

 தீ மளமளவென்று பரவியது. காரில் இருந்த பெட்ரோல் டீசல் டேங்கில் வெடித்து சிதறியதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. உடனே காவலாளிகள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது தீ வேகமாக எரிந்து கொண்டு இருந்தது. தீயை கட்டுப்படுத்த அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். 2 தீயணைப்பு வண்டிகளில் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து தக்கலை, கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். 4 வண்டிகளில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீ அணைக்க முயன்றனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சர்வீஸ் ஸ்டேஷன் நிறுத்தப்பட்ட 16 கார்கள் எரிந்து சேதமடைந்தது.

காரின் இருக்கைகள் உள்பட அனைத்து பகுதிகளும் எரிந்து சேதம் ஏற்பட்டது. தீயில் எரிந்து சாம்பலான கார்கள் எலும்புக்கூடுகள் போல உள்ளது. 25-க்கும் மேற்பட்ட கார்கள் சேதம் இன்றி தப்பியது. இது பற்றி தகவல் அறிந்ததும் நேசமணிநகர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கார் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது பற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News