உத்தனப்பள்ளி அருகே தோட்டத்து வீட்டில் முதியவர்களை தாக்கி ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை
- கோவிந்தம்மாள் உள்பட 4 பேரையும் சரமாரியாக தாக்கி விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த தொட்டமெட்டரை கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தவர் ராஜா (வயது60). இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களது மருமகன், பேத்தி ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில் வழக்கம் போல் நேற்றிரவு ராஜா தனது குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டு தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு திடீரென மர்ம நபர்கள் 7 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து இறங்கினர்.
அப்போது ராஜா வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். அங்கு தூங்கி கொண்டிருந்த கோவிந்தம்மாளின் கழுத்தில் கத்தியை வைத்து அணிந்திருந்த தங்க நகைகளை கழட்டி கொடு இல்லை என்றால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளனர். அவர் உயிருக்கு பயந்து உடனே தான் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை கழட்டி கொடுத்தார். பின்னர் அங்கு பீரோவில் இருந்த ரூ.4 லட்சம் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். பின்னர் கோவிந்தம்மாள் உள்பட 4 பேரையும் சரமாரியாக தாக்கி விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து அவர்கள் உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்கள் தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர்களை நோட்டமிட்டு திட்டம் போட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சமீபத்தில் ஈரோட்டில் முதிய தம்பதியரை கொன்று நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் உத்தனப்பள்ளி அருகே நடந்த இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரே கும்பல் கைவரிசை காட்டியுள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.