தமிழ்நாடு செய்திகள்

மழை இல்லாததால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 2 அடி சரிவு

Published On 2025-11-09 10:31 IST   |   Update On 2025-11-09 10:31:00 IST
  • ரூல்கர்வ் முறையை கைவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
  • அணைக்கு 463 கனஅடி நீர் வருகிறது. 5916 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

கூடலூர்:

கேரளா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தேனி மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இங்கு பாசனத்திற்கு போக வைகை அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

பருவமழை தொடங்கிய போது கடந்த அக்.17ம் தேதி கனமழை பெய்தது. இதனால் 132 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 138 அடியை எட்டியது.

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி 142 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்ற போதும் ரூல்கர்வ் விதிமுறைப்படி 18ம் தேதி கேரள பகுதிக்கு உபரிநீர் திறக்கப்பட்டது.

மழை தொடர்ந்ததால் அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியது. இருந்த போதும் ரூல்கர்வ் முறைப்படி கேரள பகுதிக்கு 9 நாட்களுக்கு வீணாக தண்ணீர் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மழை குறைந்ததாலும் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது.

எனவே ரூல்கர்வ் முறையை கைவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கேரளாவுக்கு எந்த பயனுமின்றி தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழை இல்லாததால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. அந்த தண்ணீரை தேக்கி வைத்திருந்தால் தற்போது பாசனம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே தமிழக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

கடந்த வாரம் 137.65 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 135.20 அடியாக குறைந்துள்ளது. இதனால் தமிழக பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு 1820 கனஅடியில் இருந்து 1780 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு 463 கனஅடி நீர் வருகிறது. 5916 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 68.49 அடியாக உள்ளது. குடிநீர் மற்றும் கால்வாய் பாசனத்திற்கு என மொத்தம் 2049 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 1597 கனஅடி நீர் வருகிறது. 5442 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News