மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட்டு சென்ற காட்சி
5 நாட்களுக்கு பிறகு மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் இயக்கம்
- வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது.
- மலை ரெயில் பாதை தண்டவாளங்கள் சேதமடைந்தன.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினந்தோறும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இந்த மழைக்கு மலைரெயில் பாதையில், கல்லார் ரெயில் நிலையத்தில் இருந்து குன்னூர் வரை உள்ள ரெயில் பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்தன. பல்வேறு இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டது. இதனால் மலை ரெயில் பாதை தண்டவாளங்கள் சேதமடைந்தன.
இதனால் கடந்த 5 நாட்களாக மலை ரெயில் ரத்து செய்யப்பட்டு, பாறைகள், மண்சரிவுகளை அகற்றி, தண்டவாளங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
கடந்த 5 நாட்களாக நடந்து வந்த சீரமைப்பு பணிகள் முடிவடைந்தது. இதையடுத்து இன்று முதல் மலைரெயில் போக்குவரத்து தொடங்கியது. அதன்படி இன்று காலை மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட்டு சென்றது. மலை ரெயிலில் பயணிகள் உற்சாகத்துடன் பயணித்தனர்.
5 நாட்களுக்கு பிறகு மலை ரெயில் இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.