தமிழ்நாடு செய்திகள்

தனியார் மழலையர் பள்ளி உரிமம் ரத்து - கோடை கால வகுப்புகளுக்கு தடை விதித்து கலெக்டர் உத்தரவு

Published On 2025-04-30 12:22 IST   |   Update On 2025-04-30 12:58:00 IST
  • திறந்து வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி மூழ்கி உயிரிழந்தார்.
  • கோடை கால விடுமுறை நாட்களில் எவ்வித நிகழ்வுகளின் பெயரில் பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது.

மதுரை:

மதுரை கே.கே நகர் பகுதியில் செயல்பட்டு வந்த கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியில் அரசு அனுமதியின்றி கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 4 வயதான சிறுமி ஆருத்ரா வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது திறந்து வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் மழலையர் பள்ளியில் வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி பள்ளிக்கு சீல் வைத்தனர்.

சிறுமி உயிரிழந்தது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய பள்ளி நிர்வாக பராமரிப்பு பணிகளின்போது அலட்சியமாக செயல்பட்டதாக பள்ளி தாளாளர் திவ்யா மற்றும் உதவியாளர் வைர மணி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் 2 பேரும் நீதி மன்றத்தில் ஆஜரப்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். சிறுமி இறந்த தனியார் மழலையர் பள்ளியில் உரிமத்தை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ரத்து செய்து உள்ளனர்.

இந்த நிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மதுரை மாவட் டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் மழலையர் பள்ளி உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளும் கோடை கால விடுமுறை நாட்களில் எவ்வித நிகழ்வுகளின் பெயரில் பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது. இதனை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டு உள்ளார்.

Tags:    

Similar News