தமிழ்நாடு செய்திகள்

விபத்துக்குள்ளான லாரி-காரை படத்தில் காணலாம்.

எட்டயபுரம் அருகே லாரி-கார் மோதி விபத்து - வக்கீல் உள்பட 4 பேர் பலி

Published On 2025-06-13 11:11 IST   |   Update On 2025-06-13 11:11:00 IST
  • மேலக்கரந்தை பகுதியில் கார் சென்றபோது எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.
  • படுகாயமடைந்த நீதிபதி பூரண ஜெயஆனந்த் உள்ளிட்ட 2 பேர் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எட்டயபுரம்:

தஞ்சாவூரை சேர்ந்த நீதிபதி பூரணஜெய ஆனந்த் தலைமையில் 6 பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு இன்று காலை தஞ்சாவூருக்கு காரில் புறப்பட்டனர்.

இவர்களது கார் தூத்துக்குடி-மதுரை சாலையில் எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த சாலையில் தூத்துக்குடியில் இருந்து ஜிப்சம் ஏற்றிக்கொண்டு அரியலூருக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. மேலக்கரந்தை பகுதியில் கார் சென்றபோது எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விளாத்திகுளம் டி.எஸ்.பி. அசோகன் தலைமையில் மாசார்பட்டி போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து பலியானவர்களின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பலியானவர்கள் தஞ்சாவூரை சேர்ந்த வக்கீல் தனஞ்செயன் ராமமூர்த்தி, கார் டிரைவர் வாசுராமநாதன் என்பதும், மற்றொருவர் நீதிபதியின் பாதுகாவலராக வந்த போலீஸ்காரர் என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் படுகாயத்துடன் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் ஒருவரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

படுகாயமடைந்த நீதிபதி பூரண ஜெயஆனந்த் உள்ளிட்ட 2 பேர் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News