தமிழகத்தில் 23-ந்தேதி முதல் மணல் லாரிகள் ஓடாது- வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு
- கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
- மணல் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு மணல் குவாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 23-ந்தேதி முதல் லாரிகள் ஓடாது.
இதுகுறித்து மாநிலத் தலைவர் யுவராஜ் கூறியதாவது:-
கடந்த 1½ ஆண்டுகளாக மணல் குவாரிகள் இயங்கவில்லை. இதனால் மாற்றாக எம்.சாண்ட் பயன்படுத்தப்படுகிறது. குவாரி உரிமையாளர்களால் ஜல்லி எம்.சாண்ட், பி சாண்ட் விலை உயர்த்தப்பட்டது. யூனிட்டுக்கு ரூ.1000 வீதம் 2 முறை உயர்த்தி உள்ளனர்.
கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதை அடுத்து சமீபத்தில் 1000 ரூபாய் விலை குறைக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
ஆனால் எம்.சாண்ட் விலை குறைக்கப்படவில்லை. கல் குவாரிகளுக்கு கேரளாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சட்ட விரோதமாக லாரிகளில் கல் கொண்டு செல்லப்படுகிறது.
இதன் காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கல் குவாரிகளை அரசுடமையாக்க வேண்டும்.
மணல் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது. இது பற்றி அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மணல் குவாரிகளை விரைவாக திறந்து விலை உயர்வை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் மணல் லாரிகள் ஓடாது. லாரிகளை நிறுத்தி வைத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.