தமிழ்நாடு செய்திகள்

கம்பி வேலியில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுத்தை- மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் சிகிச்சை

Published On 2025-10-29 14:53 IST   |   Update On 2025-10-29 14:53:00 IST
  • சிறுத்தையின் உடலில் சிறிய கீறல் காயங்கள் மட்டுமே இருந்த நிலையில் உடனடியாக சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
  • சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொழுமம் வனச்சரக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறியது.

அந்த சிறுத்தை வனப்பகுதியை ஒட்டியுள்ள ஆண்டிப்பட்டி பழனிசாமி என்பவரது விவசாய தோட்டத்திற்குள் புகுந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலியில் சிக்கியது. அதில் இருந்து வெளியே வர முடியாமல் நீண்ட நேரமாக போராடியது.

இது குறித்த தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் கோவை கால்நடை மருத்துவர் வெண்ணிலா மற்றும் ஓய்வு மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழுவினர் கம்பி வேலியில் சிக்கியிருந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

பின்னர் சிறுத்தையை மீட்டு பார்த்ததில் சிறுத்தையின் உடலில் சிறிய கீறல் காயங்கள் மட்டுமே இருந்த நிலையில் உடனடியாக சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிறுத்தை ஆரோக்கியமாக இருந்த நிலையில் கூண்டில் அடைக்கப்பட்டு உடுமலை அருகே உள்ள அமராவதி வனச்சரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News