தமிழ்நாடு செய்திகள்

கல்வார்பட்டி ஊராட்சி நிதி முறைகேடு விவகாரம்- அதிகாரிகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Published On 2025-07-31 13:51 IST   |   Update On 2025-07-31 13:51:00 IST
  • ஊராட்சி மன்ற தலைவர், செயலாளர் ஆகியோர் இணைந்து இலவச வீடு திட்டத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
  • அரசின் திட்டங்களை பெற லஞ்சம் கொடுக்கும்படி ஏழை, எளியோரை கட்டாயப்படுத்துகிறார்.

மதுரை:

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த துரைசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் மற்றும் மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் கிராம ஊராட்சியில் உள்ள மக்கள் பயன் பெற்றனர். இந்நிலையில் கல்வார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இணைந்து இலவச வீடு திட்டத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து உள்ளனர்.

அதேபோல 100 நாள் வேலை திட்டத்தில் பங்கேற்று வேலை செய்யாதவர்கள் பெயரில் நிதி ஒதுக்கி ஏராளமான தொகையை ஊராட்சி செயலாளர் மோசடி செய்து உள்ளார். அரசின் திட்டங்களை பெற லஞ்சம் கொடுக்கும்படி ஏழை, எளியோரை கட்டாயப்படுத்துகிறார். இந்த மோசடி குறித்து அரசு அதிகாரிகளுக்கு மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கல்வார்பட்டி ஊராட்சி நிதியை முறைகேடு செய்த விவகாரத்தில் ஊராட்சி தலைவர், செயலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, கல்வார்பட்டி ஊராட்சியில் வண்டிப்பாதை ஆக்கிரமிப்புக்கு ஊராட்சி தலைவரும், செயலரும் ஆதரவு அளித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது போல பல்வேறு மோசடியில் அவர்கள் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இது சம்பந்தமாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதாடினார். விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்டவர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். மேலும் இது குறித்து அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்று அரசு வழக்கில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள், உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

Tags:    

Similar News