1 லட்சம் மனிதரில் ஒரு Rapist இருப்பதுபோல் 1 லட்சம் நாய்களில் ஒரு ரேபிஸ் நாய் இருக்கலாம் - நடிகை வினோதினி
- இதற்கு வழங்கப்பட்ட நிதி மாநகராட்சிகளால் சரியாக பயனப்டுத்தப்படவில்லை.
- தெருக்களை சுத்தமாக வைத்திருந்தாலே பிரச்சனை தீரும்
தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு, 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதை நாய் பிரியர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்க்கின்றனர். இன்று திருச்சி மற்றும் சென்னையில் இந்த முடிவை கண்டித்து பேரணி நடத்தப்பட்டது.
சென்னையில் நடந்த பேரணியில் நடிகைகள் வினோதினி வைத்தியநாதன், சாயா வரலட்சுமி, அம்மு, இயக்குனர் வசந்த், உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்கள்களிடம் பேசிய வினோதினி, "ரேபிஸ் தொற்றால் மனிதர்கள் பாதிக்கப்படுவதை நான் மறுக்கவில்லை. ஆனால் எப்படி மனிதர்களில் 1 லட்சம் பேரில் ஒரு ரேப்பிஸ்ட் இருக்கிறானோ அதேபோல 1 லட்சம் நாய்களில் ஒரு நாய்க்கு ரேபிஸ் இருக்கலாம்.
அந்த நாய்களை மட்டும் பிடித்து அவற்று சிகிச்சை அளிக்கலாம். இதற்கு வழங்கப்பட்ட நிதி மாநகராட்சிகளால் சரியாக பயனப்டுத்தப்படவில்லை.
கருத்தடை செய்து நாய்களை கட்டுப்படுத்தி இருக்கலாம். நாம் தெருக்களில் உணவு குப்பைகளை கொட்டுவதும் நாய்களின் பெருக்கத்துக்கு காரணம். தெருக்களை சுத்தமாக வைத்திருந்தாலே பிரச்சனை தீரும்" என்று தெரிவித்தார்.