தமிழ்நாடு செய்திகள்

மக்களைப் பாதுகாக்க வேண்டியதே அரசுதான்: முதல்வரை சாடிய எடப்பாடி பழனிசாமி

Published On 2025-10-02 22:59 IST   |   Update On 2025-10-02 22:59:00 IST
  • தன்னுடைய வீட்டுக்கு உழைக்கும் தலைவர்கள் கருணாநிதி, ஸ்டாலின்.
  • மக்களுக்காக உழைத்த தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்கள் என்றார் இ.பி.எஸ்.

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி தொகுதியில், 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தை முடித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூர்-தர்மபுரி பிரதான சாலையில் திரண்டிருந்த ஏராளமான மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:

தி.மு.க. ஆட்சிக்கு வந்து 53 மாதம் ஆகிவிட்டது. இந்த தொகுதிக்கு ஏதாவது பெரிய திட்டம் கொண்டுவந்தார்களா? சிந்தியுங்கள்.

அ.தி.மு.க. அரசு இருக்கும்போது ஏழை, எளிய மாணவர்கள் படிக்க பொறியியல் கல்லூரி கொண்டுவந்தோம். எல்லோரும் இன்ஜினியராகும் வாய்ப்பு உருவாக்கினோம். பட்டப்படிப்புக்கு கலை அறிவியல் கல்லூரி கொண்டுவந்தோம். கிராமம் முதல் நகரம் வரை அதிகமாக பட்டப்படிப்பு படிக்கும் சூழலை உருவாக்கினோம்.

கே.பி.அன்பழகன் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது அம்மாவிடம் எடுத்துச்சொல்லி 68 கலை அறிவியல் கல்லூரியை 10 ஆண்டுகளில் கொண்டுவந்தோம். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி என அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சிறப்பான சிகிச்சை அளித்தோம். மருத்துவக் கல்லூரி இடங்களை 3,445-ல் இருந்து 6 ஆயிரம் பேருக்கு உருவாக்கினோம்.

அதுமட்டுமல்ல, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 4 பொறியியல் கல்லூரி, 7 சட்டக்கல்லூரி உங்கள் மாவட்டத்திலும் ஒரு சட்டக்கல்லூரி கொண்டுவந்தோம், 4 வேளாண்மைக் கல்லூரி, 5 கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையம் என பல கல்லூரிகளைத் திறந்து இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதன்மை மாநிலம் என்ற இலக்கை 2019-ம் ஆண்டிலேயே அடைந்துவிட்டோம்.

சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும், மாநிலம் மேன்மையடைய கல்வி சிறக்க வேண்டும் என கல்விக்கு அதிக நிதி ஒதுக்கினோம். ஒரு அரசு எப்படி செயல்பட்டது என்பதற்கு அ.தி.மு.க. ஆட்சியே உதாரணம்.

தி.மு.க. ஆட்சியில் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தாரா? மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என ஸ்டாலின் பேசுகிறார். நாங்கள் மத்திய அரசை எதிர்பார்க்கவில்லை, அம்மா இருக்கும்போது 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மாநில அரசின் நிதியில் உருவாக்கினார். அப்படியான தில்லு திராணி ஸ்டாலினுக்கு இருக்கிறதா?

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட, அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா முதல்வராக இருந்தபோது தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்து தொழிற்சாலைகள் எல்லாம் இயங்கிவருகின்றன.

அம்மா வழியில் வந்த அரசு 2019 ஜனவரியில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி சுமார் 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதன்மூலம் பல தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வந்தது, இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது.

ஸ்டாலினும்தான் முதலீடு ஈர்க்கிறேன் என்று வெளிநாடு போனார். 922 ஒப்பந்தங்கள் போடப்பட்டு, பத்தரை லட்சம் முதலீடு ஈர்க்கப்பட்டு, 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார்கள். 77 சதவீத ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டதாகச் சொன்னார். அப்படி என்றால் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லையே? எல்லாம் பொய். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பிறகும் இப்போதும் அதையே செய்கிறார்.

ஜெர்மனிக்கு தொழில் முதலீடு ஈர்க்கப்போகவில்லை, முதலீடு செய்யப்போனதுதான் உண்மை. வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் சொல்கிறார். வெள்ளை அறிக்கை விடவேண்டும் என்று கேட்டேன். வெள்ளை பேப்பரை எடுத்து தொழிற்துறை மந்திரி காட்டுகிறார். ஸ்டாலின் அவர்களே… தொழில்துறை மந்திரியும் சரி, நீங்களும் சரி சட்டமன்றத் தேர்தலில் பூஜ்ஜியம்தான் வாங்கப் போறீங்க. எப்படி வெள்ளை பேப்பரை காட்டுறீங்களோ அதேமாதிரி மக்கள் வெள்ளை பேப்பரில் பூஜ்ஜியம் போட்டுக் கொடுப்பார்கள்.

பிரதான எதிர்க்கட்சித் தலைவர் கேட்டால், மக்களுக்காக அதை சொல்ல வேண்டியது உங்கள் கடமை. ஆனால் கிண்டலும் கேலியும் செய்து மக்களை அவமானப்படுத்தும் விதமாக, இளைஞர்களை ஏமாற்றும் விதமாக வெறும் வெள்ளைப் பேப்பரை காட்டுகிறீர்கள். இதற்காகவா உங்களை அமைச்சராக்கினார்கள்? இவர்களுக்கு முடிவுகட்டும் தேர்தல் 2026 தேர்தல்.

இப்போது எங்கு பார்த்தாலும் பள்ளி, கல்லூரிக்கு அருகில் கஞ்சா விற்பனை நடக்கிறது. போதைப் பொருளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று நான் சொன்னபோது கேட்காமல், இப்போது பேசுகிறார். மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். எல்லோரும் சீரழிந்தபிறகு சொல்லி என்ன பயன்?. மக்களுக்காக உழைத்த தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்கள். தன்னுடைய வீட்டுக்கு உழைக்கும் தலைவர்கள் கருணாநிதி, ஸ்டாலின்.

அண்மையில் கரூரில் நடந்த சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது, ஒரு நபர் கமிஷன் போட்டிருப்பதால் ஆழமாகப் போகாமல் மேலோட்டமாகப் பேசுறேன். துணை முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் போனார். செப்டம்பர் 27 துயர சம்பவத்தில் 41 பேர் இறந்ததாக தகவல் தெரிவித்தனர், உடனே தனி விமானத்தில் திருச்சி வந்தார். அங்கிருந்து நேரடியாக மருத்துவமனைக்கு சென்று பார்த்து அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் சுற்றுலா போய்விட்டார்.

என்னங்க அநியாயம் இது? 41 பேர் இறந்துள்ளனர். இப்போது மக்கள் துயரத்தில் பங்கெடுப்பவரே உண்மையான துணை முதல்வர். இப்படிப்பட்டவர்கள் ஆட்சி செய்தால் இப்படித்தான் இருக்கும். யார் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்றுதான் அவர் நினைக்கிறார். உண்மையிலேயே அக்கறை இருந்தால் இங்கிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் அளவுக்கு திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் அழகு. அதெல்லாம் கருணாநிதி குடும்பத்தினருக்கு வராது. மக்களைப் பற்றி கவலைப்படாத கட்சி அரசு என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது.

ஒரு பொதுக்கூட்டம் என்றால் மக்கள் எப்படி வருவார்கள், எப்படி பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட வேண்டும். முழு கவனம் எடுத்து செயல்பட்டிருந்தால் இந்த உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம். ஏற்கனவே அவர்கள் 4 கூட்டம் நடத்தினார்கள், அவற்றிலும் பாதுகாப்பில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிற போது அவர்களைக் காப்பது நம் கடமையாக இருக்க வேண்டும்.

நடுநிலையோடு சொல்கிறேன். அ.தி.மு.க. பொன்விழா கண்ட கட்சி, எம்.ஜி.ஆர். வருகிறார் என்றால் ஒருநாள் முன்பே மக்கள் காத்துக் கிடப்பார்கள். அப்படி இருக்கும் காலத்தில்கூட எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை, அம்மா பல கூட்டம் போட்டார்கள். லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அப்போதும் எதுவும் நடக்கவில்லை.

53 ஆண்டு காலம் பல மாநாடு, பல கூட்டம், பல ஆர்ப்பாட்டம் நடத்தினோம். எந்த சம்பவமும் நடைபெறவில்லை. அ.தி.மு.க. மட்டுமல்ல தி.மு.க. உட்பட எல்லா கட்சிகளுக்கும் முழமையாக பாதுகாப்பு கொடுத்தது அ.தி.மு.க. அரசு. எந்தக் கட்சி கூட்டம் நடத்தினாலும் முழு பாதுகாப்பு கொடுத்ததால் இதுபோல எந்த சம்பவமும் நடக்கவில்லை.

அ.தி.மு.க. ஆட்சியில், கேட்கப்பட்ட அத்தனை கூட்டங்களுக்கும் அனுமதி கொடுத்தோம், எதையும் நிறுத்தவில்லை. ஏனெனில் எதையும் சந்திக்கும் தெம்பு, திராணி அ.தி.மு.க.வுக்கு இருந்தது. இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இல்லை பொம்மை முதல்வர். தி.மு.க. ஆட்சியில் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கொடுப்பதில்லை, நீதிமன்றம் போய் அனுமதி வாங்கி கூட்டம் நடத்தும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்படியே நீதிமன்றம் அனுமதி கொடுத்தாலும் இந்த அரசு பாதுகாப்பு கொடுக்க மறுக்கிறது அதனால் 41 உயிர்களை இழந்திருக்கிறோம்.

நான் ஜூலை 7-ம் தேதி எழுச்சி பயணம் தொடங்கினேன் பாப்பிரெட்டிப்பட்டி 165-வது தொகுதி. நான்கைந்து தொகுதிகளில்தான் காவல்துறை பாதுகாப்பு கொடுத்தது, மீதி இடங்களில் எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் பாதுகாப்பில்தான் நடத்தினோம். இப்போதுதான் காவல்துறை வந்திருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் நடந்து முடிந்து 41 உயிர்கள் பறிபோன பிறகுதான் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். மக்களை பாதுகாக்க வேண்டியது தான் முதல்வரின் கடமை. அவரிடம் தான் காவல்துறை உள்ளது. தேர்தல் நேரத்தில் கருத்துகளைச் சொல்லி மோதிக்கொள்ளலாம். ஆனால், ஆட்சி அமைந்தபிறகு மக்களை கண்ணை இமை காப்பதுபோல காக்க வேண்டும். அப்படி அ.தி.மு.க. ஆட்சியில் பார்க்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் மாற்றாந்தாய் மக்கள் போல பார்ப்பது சரியல்ல, இனியாவது அரசு உணர்ந்து ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்றில்லாமல் நடுநிலையோடு பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்காக குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டது. அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது.

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14 ஆயிரம் ஏரிகள் உள்ளன், அவற்றில் 6 ஆயிரம் கண்மாய்கள் 1240 கோடி செலவில் தூர் வாரினோம். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பொதுப்பணித் துறையில் எஞ்சிய 8 ஆயிரம் ஏரிகள் தூர் வாரப்படும். விவசாயிகள் எந்நேரமும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் கொடுத்தோம். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ஒரே அ.தி.மு.க. ஆட்சியில் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. புயல், வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பேரிடரின்போது பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணைக்கப்பட்டு அதன்மூலம் அவர்களுக்கு இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம்.

விவசாய தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் கொடுத்தோம். உழவர் பாதுகாப்பு திட்டம் கொடுத்தோம். முதியோர் உதவி திட்டம் மூலம் லட்சக்கணக்கான முதியோருக்கு மாத உதவித்தொகை 1000 ரூபாய் கொடுத்தோம். ஒரே சட்டமன்ற விதி 110ன் கீழ் 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பைக் கொடுத்து, 90 சதவீதம் பேருக்குக் கொடுத்தோம்.

கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா எண்ணத்தில் உதித்தது அற்புதமான லேப்டாப் வழங்கும் திட்டம். அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. தி.மு.க. அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டம் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும்.

பொருளாதாரச் சூழலால் ஏழைப் பெண்களின் திருமணம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் 25 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் கொடுத்தோம். இன்று 87 ஆயிரம் ரூபாய் ஒரு பவுன். அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகளில் 12 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும்.

ஏழை, விவசாயத் தொழிலாளி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும்.

இந்தப் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை ஈச்சம்பாடி அணையில் இருந்து நீரேற்றம் திட்டத்தின் மூலமாக இங்கிருக்கும் 66 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம் கேட்டு என்னிடத்தில் கே.பி.அன்பழகன் அமைச்சராக இருந்தபோது கோரிக்கை வைத்தார். அதை ஏற்று அதை ஆய்வுசெய்வதற்கு 10 லட்சம் ஒதுக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது, மீண்டும் அ.தி.மு.க. அரசு அமைந்ததும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

நாட்டில் பணம், நகை திருடுவார்கள். ஆனால், தி.மு.க. ஆட்சியில் கிட்னி திருடுகிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட கேவலமான நிலை கிடையாது. தி.மு.க. எம்.எல்.ஏ மருத்துவமனையில் வறுமையில் வாடும் ஏழைகளை தேடிப்பிடித்து அவர்களுடைய கிட்னியை முறைகேடாக எடுத்து பல லட்சத்துக்கு விற்பனை செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க. அரசாங்கமே குழு அமைத்து ஆய்வு செய்து உண்மை என்பதை கண்டறிந்து, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அனுமதியை மட்டும் ரத்துசெய்தனர். இதில், யாரையும் கைது செய்யவில்லை.

கொடுமையிலும் கொடுமை வறுமை. அந்த வறுமையைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் அரசு தொடர வேண்டுமா? நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் ஒரு பெண்ணுக்கு ஆசை காட்டி கிட்னிக்குப் பதிலாக கல்லீரல் எடுத்துவிட்டனர். இப்படிப்பட்ட கொடுமையான அரசு தி.மு.க. அரசு. நான் அடிக்கடி சொல்வது போல் பொம்மை முதல்வர் நாட்டை ஆள்வதால் மக்களுக்குத் துன்பமே கிடைக்கிறது.

இந்த அரசால் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்துள்ளது? விலைவாசி உயர்ந்துபோச்சு, சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. தினந்தோறும் கொலை நிலவரம் வருகிறது.

அ.தி.மு.க. உங்களுடைய அரசு. இது விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. நானும் விவசாயி. எனக்கு வேறு எந்த தொழிலும் இல்லை, அதனால்தான் தி.மு.க. அரசால் என்மீது எந்த வழக்கும் போட முடியவில்லை. என்னென்னமோ தோண்டிப் பார்த்தார், ஒன்றும் நடக்கவில்லை. விவசாயத்தில் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாது, மண்ணைத்தான் அள்ளிச்செல்ல முடியும்.

உங்களோடு பேசும் வாய்ப்பை இறைவன் கொடுத்த வரமாகக் கருதுறேன்.

இது மண்வெட்டி பிடித்த கை. சிறு வயதில் இருந்தே என்னுடைய அப்பா விவசாயத்தில் என்னை ஈடுபடுத்தினார். விவசாயம் தெரிந்தால்தான் தொழிலாளிக்கு சொல்லிக்கொடுக்க முடியும். நெற்பயிர் எப்படி நடவேண்டும், மஞ்சள், வாழை தென்னை, பாக்கு எல்லாமே என் தோட்டத்தில் இருக்கிறது. நீங்கள் எல்லாம் தண்ணீர் வேண்டும் என்று கேட்கிறீர்கள், அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு நீங்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும்.

கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். ஏழை மக்கள் நோய்வாய்ப்பட்டால் அங்கு சென்று சிகிச்சை எடுக்கலாம். அதில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். தி.மு.க. அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து கிளினிக்கை மூடிவிட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும். இப்படி ஏதாவது திட்டம் தி.மு.க. கொண்டுவந்திருக்கிறதா?

இந்தத் தொகுதியில் பத்தல் மலைக்கு தார்ச்சாலை, ஆரம்ப சுகாதர நிலையம் அமைத்தோம், அடுக்குமாடி குடியிருப்பு கட்டினோம், கால்நடை மருத்துவமனை திறந்தோம். அ.தி.மு.க. ஆட்சியில் கடத்தூர் புதிய ஒன்றியம் அமைத்து புதிய கட்டிடம் கட்டினோம். இவற்றுக்கெல்லாம் தி.மு.க. ஆட்சியில் ரிப்பன் வெட்டி திறந்தனர். வேப்பாடு ஆற்றின் குறுக்கே தடுப்பணை கேட்டுள்ளீர்கள், கட்டிக் கொடுக்கப்படும், இத்தொகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படும், வட்டாட்சியர் அலுவலகம் பரிசீலிக்கப்படும். 2026 தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

இங்கே கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வீட்டுக்குப் போகும்போது வாகனத்தில் பத்திரமாகப் போய்ச் சேர வேண்டும். மக்களே, உயிர் முக்கியம். இரவு நேரம் வாகன ஓட்டிகள் பத்திரமாக வீடு போய் சேரவேண்டும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பை பை ஸ்டாலின் என தெரிவித்தார்.

Tags:    

Similar News