தமிழ்நாடு செய்திகள்

ஓகேனக்கல் சினிபால்ஸ் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை படத்தில் காணலாம்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 43 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது

Published On 2025-07-31 10:12 IST   |   Update On 2025-07-31 10:12:00 IST
  • மெயின் அருவி, ஐந்தருவிகள், சினிபால்ஸ் உள்பட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
  • மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஒகேனக்கல்:

கர்நாடக மற்றும் கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. இதனால் 2 அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

கடந்த 2 நாட்களாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 88 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

தற்போது கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

தொடர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர் வரத்து வினாடிக்கு 43 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது.

தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவிகள், சினிபால்ஸ் உள்பட அருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேலே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேலும் கர்நாடகா அணைகளுக்கு வரும் நீர் வரத்து குறைந்ததால் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் குறைய வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரி நீர் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தன.

இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிப்பதற்கும் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் மாவட்ட நிர்வாகமானது விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 5-வது நாளாக நீடித்து வருகிறது.

இதனால் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகளும், அதேபோல தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்க முடியாமலும், பரிசல் மூலம் சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை ரசிக்க முடியாமலும் ஏமாற்றத்து டன் திரும்பிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளன. 

Tags:    

Similar News