தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு- குளிக்க, பரிசல் இயக்க தடை

Published On 2025-09-01 10:52 IST   |   Update On 2025-09-01 10:52:00 IST
  • கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறக்கப்பட்ட வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் மட்டும் தமிழகத்துக்கு வருகிறது.
  • காவிரி ஆற்றில் குளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தருமபுரி:

கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது.

இதனால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 124.36 அடியாக இருந்தது. அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும்.

அணைக்கு வினாடிக்கு 27 ஆயிரத்து 491 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டது.

இதேபோல் கபினி அணையின் நீர்மட்டம் 2,277.75 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரத்து 37 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.

இதனால் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறக்கப்பட்ட வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் மட்டும் தமிழகத்துக்கு வருகிறது.

கடந்த சில நாட்களாக நீர் திறப்பு குறைக்கப்பட்டு இருந்த நிலையில் கர்நாடகத்தில் மீண்டும் மழைப்பொழிவு அதிகரித்து இருப்பதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்த தண்ணீர் தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று காலை வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக வந்தது. மேலும் அதிகரித்து மாலை 32 ஆயிரம் கனஅடியாக வந்தது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து அதே அளவு நீடித்து வந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண் ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதுடன், மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் பெருக்கெடுத்து ஓடியது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடைவிதித்து 2-வது நாளாக மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.

காவிரி ஆற்றில் குளிக்க முடியாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் அருவியின் அழகையும், காவிரி ஆற்றின் அழகையும் கண்டு ரசித்தவாறு அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க உள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்தை இருமாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News