தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

Published On 2025-08-22 09:40 IST   |   Update On 2025-08-22 09:40:00 IST
  • ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை 28 ஆயிரம் கனஅடியாக வந்தது.
  • காவிரி ஆற்றின் அழகை ரசிக்க மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தருமபுரி:

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது.

கபினி அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 739 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 8 ஆயிரத்து 533 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26 ஆயிரத்து 279 கனஅடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 23 ஆயிரத்து 718 கனஅடியாகவும் இருந்தது.

இந்த இரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 32 ஆயிரத்து 251 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர், கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை 28 ஆயிரம் கனஅடியாக வந்தது.

இதையடுத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது.

இதனால் மெயின் அருவிக்கு செல்லும் பாதை பூட்டு போட்டு பூட்டப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு கேட்டு முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவிரி ஆற்றின் அழகை ரசிக்க மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News