நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை- ஆயிரக்கணக்கான ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
- திருப்பூண்டி அருகே வேதாரண்யம் வடிகால் ஆற்றில் தண்ணீர் வடியாமல் தேங்கி உள்ளது.
- அறுவடை செய்த நெல்மணிகள் தொடர் மழை காரணமாக ஈரப்பதம் அதிகரித்துள்ளது.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்று நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரவு முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது.
நாகை மாவட்டத்தில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, திருக்குவளை, திட்டச்சேரி, திருமருகல், திருப்புகலூர், தேவங்குடி, கட்டுமாவடி, திருச்செங்காட்டங்குடி, சியாத்தமங்கை, வாஞ்சூர், கீழ்வேளூர், கீழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது. இருப்பினும் அவர்கள் ஆங்காங்கே குடைப்பிடித்தபடி நடந்து சென்றததை பார்க்க முடிந்தது.
திருப்பூண்டி அருகே வேதாரண்யம் வடிகால் ஆற்றில் தண்ணீர் வடியாமல் தேங்கி உள்ளது. இதையடுத்து அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் குறுவை அறுவடை பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அறுவடை செய்த நெல்மணிகள் தொடர் மழை காரணமாக ஈரப்பதம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. எனவே நெல்மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்யவும், ஈரப்பத அளவை 25 சதவீதம் வரை உயர்த்தி கொள்முதல் செய்யவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நாகை கலெக்டர் அலுவலகம் அருகே பழைய நாகூர் சாலையில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறாததால் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கி உள்ளன. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள நாகை மீனவர்கள் 21-ந் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் எனவும், மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
இதையடுத்து விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். மேலும் கரையில் உள்ள மீனவர்கள் கடந்த 3 நாட்களுக்கு மேலாக கடலுக்கு செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். போதுமான மீன்வரத்து இல்லாத காரணத்தால் நாகை துறைமுகத்தில் மீன்களின் விலையும் உயர்ந்தது.
நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம் வருமாறு(மில்லி மீட்டரில்):-
நாகப்பட்டினம்-82.02, திருப்பூண்டி-84, வேளாங்கண்ணி-47.06, திருக்குவளை-63.08, தலைஞாயிறு-45.20, வேதாரண்யம்-42.02, கோடியக்கரை-40.08. அதன்படி மொத்த மழை அளவு-394.06 மி.மீட்டர், சராசரி மழை அளவு-56.37 மி.மீட்டராகவும் பதிவாகி உள்ளது.
கோட்டூர் அருகே கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
இதேபோல் தொடர் மழையால் திருவாரூர் மாவட்டம் நன்னிலம், திருக்கண்டீஸ்வரம், மணவாளம்பேட்டை, அதம்பாவூர், அச்சுதமங்கலம், சரபோஜி ராஜபுரம், மருவத்தூர், மன்னார்குடி, பரசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 5,000 ஏக்கர் இளம் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுக தொடங்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் செலவு செய்துள்ள நிலையில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிரும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வேளாண்துறை, வருவாய்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த நிலையில் கனமழை காரணமாக கோட்டூர் அருகே புழுதிகொடி பகுதியில் விவசாய கூலித்தொழிலாளி குமார் என்பவரின் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்தவர்கள் யாருக்கும் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.