சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை: மக்கள் மகிழ்ச்சி
- தமிழகத்தின் அநேக இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், சேத்துப்பட்டு, தி.நகர், மெரினா உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.