ஆலங்குளத்தில் சோலார் கம்பெனிக்காக மரங்கள் வெட்ட தடை: மதுரை ஐகோர்ட் உத்தரவு
- வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
- விசாரணை முடிவில், மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை:
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கலா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா மாறாந்தை கல்லத்திகுளம் கிராமத்தில் 350 ஏக்கர் நிலத்தில் உள்ள சுமார் 8 லட்சம் அரிய வகை மரங்களையும், மான்கள் உள்ளிட்ட விலங்குகளையும் எந்திரங்கள் மூலம் அழித்து தனியார் நிறுவனம் சோலார் கம்பெனி நிறுவுவதை தடுக்க வேண்டும்.
மேற்கண்ட 350 ஏக்கர் காடுகளை அரசே நில ஆர்ஜிதம் செய்து அருகில் உள்ள காவல் குட்டி பரம்பை பாதுகாக்கப்பட்ட காடுகளுடன் இந்த காடுகளையும் இணைக்க வேண்டும். தொல்லியல் துறையின் முன் அனுமதி இன்றியும் மாவட்ட பசுமை கமிட்டியின் அனுமதி இன்றியும் நகர்புற வளர்ச்சி துறையின் அனுமதியின்றியும் மரங்கள் அழிக்கப்பட்டு வருவது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பினேகாஸ், அர்ஜுன் குமார் ஆகியோர் ஆஜராகி தனியார் நிறுவனத்திற்காக ஏராளமான மரங்களை வெட்டுவது சட்டத்துக்கு புறம்பானது என வாதாடினார். விசாரணை முடிவில், மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.